/

'ஈரப் பதத்தால் கரோனா தொற்றின் ஆயுள் அதிகரிக்கிறது'

காற்றில் உள்ள ஈரப்பதம், திரவத்துளிகளில் உள்ள கரோனா வைரஸ் தொற்றின் ஆயுள் காலத்தை அதிகரிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

எஸ். மணிவண்ணன்

காற்றில் உள்ள ஈரப்பதம், திரவத்துளிகளில் உள்ள கரோனா வைரஸ் தொற்றின் ஆயுள் காலத்தை அதிகரிப்பதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

அதிக ஈரப்பதம் மிகுந்த காற்றானது திரவத் துளிகளில் உள்ள கரோனா வைரஸ் தொற்றின் ஆயுள் காலத்தை 23 மடங்கு அதிகரிக்கிறது.

இந்த ஆய்வின்படி சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே வைரஸ் பரவலைத் தடுக்க முடியும் என கண்டறியப்பட்டுள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்று சுவாசித்தல், தும்மல் போன்றவற்றால் அதிக அளவில் பரவுகிறது. மேலும் இதில் வெளிவரும் வைரஸ் தொற்று காற்றின் மூலமே பரவுவதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரப்பதம் மிகுந்த காற்றோட்டம் எவ்வாறு திரவத்துளிகளில் உள்ள கரோனா தொற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள மிசெளரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், ஈரப்பதக் காற்றில் திரவத்துளிகளில் உள்ள கரோனா வைரஸின் பாதிப்பு அளவு துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி ஒருவரின் தும்மல் அல்லது இருமல் மூலம் வெளிவரும் திரவத் துளிகளில், அந்த திரவத்துளிகளின் கொள்ளளவிற்கு சரிவிகித எடை கொண்ட கரோனா வைரஸ்கள் 70 சதவிகிதம் நிலத்தில் படிவது கண்டறியப்பட்டுள்ளது.

முறையான சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் மூலம் திரவத்துளிகளின் வழியே மனிதர்கள் மீது கரோனா வைரஸ்கள் படிவதை தவிர்க்க முடியும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சாதாரன மனித சுவாசத்தில் வெளியேற்றப்படும் திரவத்துளிகள் ஒரு மைக்ரானில் பத்தில் ஒரு பங்கு முதல் 1,000 மைக்ரான் வரையிலான அளவுகளில் கரோனா வைரஸ் வெளிவரும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மனித முடியின் விட்டம் 70 மைக்ரான் அளவாகும். ஒரு பொதுவான கரோனா வைரஸ் துகள் ஒரு மைக்ரானில் பத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவாகவே இருக்கும். 

மனிதர்களிடம் இருந்து வெளிவரும் திரவத்துளிகள் பெரும்பாலும் 50 முதல் 100 மைக்ரான் விட்டமுடையவையாகவே உள்ளதாக ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை வேறு ஆய்வுகளுடன் குழுவினர் ஒப்பிட்டு பார்த்தனர். வேறு ஆய்வில் உள்ள துகள்கள் பற்றிய சோதனைகளுடன் ஒப்பிட முயன்ற போது சோளத்தின் மகரந்தத் துகள்களுடன் பொருந்தியது.

சோளத்தின் மகரந்தம் 37 மைக்ரான் விட்டமுடையதாக இருந்தது. இது வைரஸுடன் வெளியேறும் பெரும்பாலான திரவத்துளிகளின் விட்டத்திற்கு சமமானதாக இருந்தது.

Story image

ஈரப்பதம் மிகுந்த திரவத் துளிகளில் உள்ள கரோனா வைரஸ் தொற்றைப் பற்றிய ஆய்வுகளுடன் இதனைப் பாதிக்கும் காரணிகளும் ஆராயப்பட்டன. இதில் வறண்ட காற்று இயற்கையாகவே திரவத்துளிகள் ஆவியாதலை துரிதப்படுத்துவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

100 சதவிகித ஈரப்பதம் கொண்ட காற்றில், 100 மைக்ரான் விட்டம் கொண்ட பெரிய திரவத்துளிகள், வெளிவிடும் மூலத்திலிருந்து சுமார் ஆறு அடி தொலைவு வரை சென்று தரையில் விழுகின்றன.

இதேபோன்று 50 மைக்ரான் விட்டம் கொண்ட திரவத்துளிகள் 16 அடி தொலைவு அல்லது 5 மீட்டர் தொலைவு வரை சென்று படியும் திறன் கொண்டது கண்டறியப்பட்டுள்ளது.

50 சதவிகித ஈரப்பதம் கொண்ட காற்றில் 50 மைக்ரான் விட்டம் கொண்ட திரவத்துளிகள் 3.5 மீட்டர் தொலைவு வரைகூட பயணிக்கவில்லை என்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஈரப்பதம் மிகுந்த காற்றில் கரோனா வைரஸ் தொற்றின் பரவல், தீவிரத்தன்மை மற்றும் ஆயுள் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு முடிவுகள் வெளிவருகின்றன.

இந்த அனைத்து ஆய்வுகளிலுமே கரோனா ஆயுள்காலத்தை அதிகரிப்பதில் ஈரப்பதம் மிகுந்த காற்று முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.