ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

எப்படி நேர்ந்தன விமான விபத்துகள்? கோழிக்கோடும் மங்களூருவும்

பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் இதுவேதான் நடந்தது, நடந்த இடம் மட்டும்தான் வேறு - கர்நாடகத்தில் மங்களூரு! இப்போது கோழிக்கோடு. இரு விமான விபத்துகளைப் பற்றி...

News image
எப்படி நேர்ந்தன விமான விபத்துகள்? கோழிக்கோடும் மங்களூருவும்
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

ததாகத்

பத்து ஆண்டுகளுக்கு முன்னரும் இதுவேதான் நடந்தது, நடந்த இடம் மட்டும்தான் வேறு - கர்நாடகத்தில் மங்களூரு!

மங்களூருவில் விபத்துக்குள்ளான விமானம் தீப்பற்றியதால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். கோழிக்கோட்டில் விமானம் தீப்பற்றிக் கொள்ளாததால் உயிரிழப்பு குறைவு, அவ்வளவே.

துபையிலிருந்து பயணிகளுடன் கோழிக்கோட்டிலுள்ள கரிப்பூர் விமான நிலையத்தில்  வெள்ளிக்கிழமை இரவு  வந்திறங்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையைவிட்டு விலகிக் கவிழ்ந்து உடைந்து விபத்துக்குள்ளானதில் இதுவரை 18 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

தலைமை விமானியான தீபக் சாத்தேயின் அறிவுக்கூர்மை காரணமாக விமானம் தீப்பற்றுவதும் தொடர்ச்சியாக, எண்ணற்ற உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இந்த விபத்தில் சாத்தே உள்பட இரு விமானிகளுமே உயிரிழந்துவிட்டனர். விபத்துக்கான மிகச் சரியான காரணத்தை இன்னும் யாரும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால், கடுமையான மழையையும் இந்த விமான நிலையத்தின் (டேபிள் டாப் - மலை அல்லது குன்றின் முகட்டுப் பாதை) ஓடுபாதை அமைப்பும் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பரந்துபட்ட சமதள நிலப்பரப்பு இல்லாத இடங்களில், மிகவும் உயரமான அல்லது மலை / குன்றுப் பகுதியின் உச்சியில் அமைந்துள்ள ஓடுபாதையை டேபிள் டாப் - மலை முகட்டுப் பாதை என்கிறார்கள். இங்கே ஓடுபாதையின் ஒரு முனை அல்லது இரு முனைகளின் முடிவிலும் பெரும் பள்ளங்கள் அல்லது பள்ளத்தாக்குகள்தான் இருக்கும்.  இந்த ஓடுபாதையில் விமானங்கள் இறங்கி ஏறுவதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியிருக்கும்.

2010 மே மாதத்தில் விபத்து நேரிட்ட மங்களூரு விமான நிலையமும்  இதேபோன்ற மலைமுகட்டு ஓடுபாதையைக் கொண்டதுதான். அப்போது விமானம் தீப்பற்றியது, அதனால் உயிர்ச் சேதம் அதிகம், இப்போது  தீப்பற்றவில்லை. எனவே, பலரால் காயங்களுடன் தப்ப முடிந்தது. மற்றபடி விபத்துக்கான காரணங்கள் ஏறத்தாழ கோழிக்கோட்டைப் போலவேதான்.

மங்களூருவில், இதேபோல ஒரு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இறங்கியபோது, மோதி விபத்துக்குள்ளாகிப் பற்றியெரிந்தது. விமானத்தில் இருந்த 166 பேரில் 158 பேர் உயிரிழந்தனர், 8 பேர் மட்டும்தான் தப்பினர். இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான விபத்து அது.

மங்களூரு விமானத்தைச் செலுத்திய இசட். க்ளூசியா, எஸ்.எஸ். அஹ்லுவாலியா ஆகிய விமானிகளும்கூட மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள்தான். அப்போதும் மழை பெய்திருந்தது. மிகவும் அபாயகரமான வகையில் ஓடுபாதையில் தண்ணீர் நின்றுகொண்டிருந்தது.

ஆனால், அனுபவம் வாய்ந்த அந்த இரு விமானிகளும் எத்தனையோ முறை தரையிறங்கியிருக்கிறார்கள். அவர்கள் குறையெதுவும் சொல்லவில்லை என்று பின்னால் சொன்னார்கள்.

உள்ளபடியே மலைப் பகுதியில் பள்ளத்தாக்குகள் சூழ்ந்த முகட்டுப் பாதை விமான நிலையங்களில் கடும் மழை நேரத்தில் விமானங்களைத் தரையிறக்குவது எப்போதுமே ஆபத்தானதாகவே இருந்துவந்திருக்கிறது.

மலைப் பகுதியை வெட்டி உருவாக்கப்பட்ட இந்த மலைமுகட்டுப் பாதைகளில் துல்லியம் மிகவும் அவசியம்.

இந்தியாவில் 5 மலை முகட்டு ஓடுபாதைகளைக் கொண்ட விமான நிலையங்கள் இருக்கின்றன. கோழிக்கோடு, மங்களூரு மட்டுமின்றி மிசோரமில் லெங்குபுயி, சிக்கிமில் பாக்யாங், சிம்லாவில் குலு (மணாலி).

கோழிக்கோட்டில் இரு முறை விமானத்தைத் தரையிறக்க விமானி தீபக் சாத்தே முயன்றுள்ளார். இயலாத நிலையில் விபத்தை எதிர்பார்க்கும் மனநிலையிலோ என்னவோ விமானத்தைப் பல முறை வானத்திலேயே சுற்றிவரச் செய்து, விழுந்தாலும் தீப்பிடித்துவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையில்  எரிபொருளைக் காலி செய்திருக்கிறார். ஆனால், விபத்தைத் தவிர்க்க இயலவில்லை.

தொடர்ச்சியாகப் பெய்த மழை காரணமாக ஓடுபாதை சரியாகப் புலப்படவில்லை எனத் தோன்றுகிறது. ஏதோ தவறான அனுமானத்தில் இறக்கப்பட்ட விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து உடைந்துவிட்டது. நல்லவேளையாகத் தீப்பற்றவில்லை. உயிரிழப்புகளும் அதிகமில்லை. தீப்பற்றியிருந்தால் நினைத்தும் பார்க்க முடியாது.

இந்த விமான நிலையம் பாதுகாப்பானது அல்ல என்றும் இங்கே விமானங்களைத் தரையிறக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஏற்கெனவே  பல ஆண்டுகளுக்கு முன்னரே பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

Story image

மங்களூருவில் தவறான தொலைவில் தரையிறங்கிவிட்டோம் என்று உணர்ந்ததுமே, சரிசெய்துவிடலாம் எனக் கருதி, மீண்டும் வானத்தில் எழுவதற்கான முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர்.

ஆனால், நல்லவேளையாக கோழிக்கோட்டில் அப்படி எதுவும் முயற்சிக்கப்படவில்லை, நிலைமை விபரீதமாகிவிட்டிருக்கும்.

இந்த விமானத்தில் வந்து தப்பிப் பிழைத்த ஒரு பயணி, புலப்பாடு மிகவும் மோசமாக இருந்ததால் கணிசமான நேரம் தரையிறங்கவே முயலவில்லை, ஓரளவு நிலைமை மேம்பட்டதும்தான் தரையிறங்கும் முயற்சியை விமானிகள் மேற்கொண்டனர் என்று தெரிவித்துள்ளார்.

கோழிக்கோட்டில் விமானம் பாதுகாப்பாகத்தான் தரையிறங்கியது, ஆனால், ஓடுபாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போதுதான் கட்டுப்பாட்டை இழந்து, தடம் விலகி, சுற்றுச்சுவரை இடித்துக்கொண்டு, முகட்டுப் பாதை அருகிலிருந்த 35 அடி பள்ளத்திற்குள் விழுந்து இரண்டாக உடைந்துவிட்டது என வேறுசில  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோழிக்கோட்டில் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதுடன் வேகமும் குறைந்திருந்ததால் விபத்தின் வீரியம் குறைந்துவிட்டது. எரிபொருள் காலி செய்யப்பட்ட நிலையில் தீப்பற்றவுமில்லை.

ஆனால், மங்களூருவில் விபத்து நேரிடப் போகிறது என்பதை அறிந்ததும் விமானத்தை மீண்டும் பறக்கச் செய்ய முயன்றதில் வேகம் அதிகரித்ததால் நிலைமை மோசமடைந்தது, தீயும் பற்றிக் கொண்டது.

Story image

மங்களூருவில் விமான விபத்தில், முகட்டுப் பாதை என்ற காரணத்தினாலேயே 158 பேரைப் பலி கொடுத்தபோதே, நாட்டிலுள்ள பிற முகட்டுப் பாதை விமான நிலையங்களின் பாதுகாப்பு பற்றி சிந்தித்தோமா, சிந்தித்திருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுத்திருக்கிறோம், எடுத்திருந்தால் ஏன் செயல்படுத்தவில்லை, என்ன செயல்படுத்தினோம், எவ்வாறு நேர்ந்தது கோழிக்கோடு விபத்து?

விமான விபத்துகள் நடந்து முடிந்த பிறகு எப்படி நேர்ந்தது, யார் பிழை செய்தது என்பதை ஆராய்வதும் அறிக்கை அளிப்பதும் எவ்வளவு முக்கியமோ அதைவிடவும் முக்கியம், எதிர்காலத்தில் விபத்துகள் ஏற்படாமல் தவிர்ப்பதுதான். எப்போதுதான் பாடங் கற்றுக் கொள்ளப் போகிறோமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.