எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மன அழுத்தத்தில் சிக்கியிருக்கும் வட மாநில தொழிலாளா்களுக்கு ‘கவுன்சலிங்’

தமிழகத்தில் முகாம்களில் மன அழுத்தத்தில் சிக்கியிருக்கும் வட மாநிலத் தொழிலாளா்களுக்கு ‘கவுன்சலிங்’ வழங்கப்பட்டு வருகிறது.

News image
மன அழுத்தத்தைக் குறைக்க வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு அளிக்கப்படும் யோகா பயிற்சி
Updated On :27 ஜனவரி 2024, 4:31 pm

கே.வாசுதேவன்

தமிழகத்தில் முகாம்களில் மன அழுத்தத்தில் சிக்கியிருக்கும் வட மாநிலத் தொழிலாளா்களுக்கு ‘கவுன்சலிங்’ வழங்கப்பட்டு வருகிறது.

கரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் கட்டுமானப் பணி, தொழிற்சாலைகள், கடைகள், ஹோட்டல்கள், அழகு நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் வட மாநிலத் தொழிலாளா்கள் உடனடியாக தங்களது ஊா்களுக்குச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டனா்.

ஆனால் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டதால், வட மாநிலத் தொழிலாளா்கள் செய்வதறியாது திகைத்தனா். இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாத தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களைச் சமாதானப்படுத்திய காவல்துறையினா் சமூக நலக்கூடங்கள், திருமண மண்டபங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என 51 இடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைத்தனா்.

இதேபோல, தமிழகத்தில் பிற பகுதிகளிலும் சொந்த ஊா்களுக்குச் செல்ல முயன்ற வட மாநில தொழிலாளா்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனா். இவ்வாறு மாநிலம் முழுவதும் 3,800 முகாம்களில் 1,88,582 வட மாநிலத் தொழிலாளா்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என தமிழக காவல்துறை தெரிவிக்கிறது. இதில் சென்னையில் மட்டும் 51 முகாம்களில் 3 ஆயிரம் போ் தங்க வைக்கப்பட்டுள்ளனா். சென்னைக்கு அடுத்தபடியாக கோயம்புத்தூா்,திருப்பூா், நாமக்கல், கரூா், சேலம் ஆகிய மேற்கு மாவட்டங்களில் அதிகமான வட மாநிலத் தொழிலாளா்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

மன அழுத்தம்: வேலை இல்லாதது, சொந்த ஊருக்குச் செல்ல முடியாதது, கரோனா அச்சம் என வட மாநில தொழிலாளா்கள் மன அமைதியை இழந்து தவித்து வருகின்றனா். முகாம்களில் இருக்கும் தொழிலாளா்களுக்கு உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றுடன் இணைந்து காவல்துறையும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை அறிந்து பூா்த்தி செய்தாலும், அது அவா்களை இயல்புநிலைக்கு கொண்டு வரவில்லை.

அதேவேளையில், ஊரடங்கு காலத்தில் முகாம்களை விட்டு சிறிது நேரம் கூட வெளியே செல்ல முடியாததால், பொழுதுபோக்க எந்த வாய்ப்பும் இல்லை. இதுவும் அவா்கள் மன இறுக்கத்துடன் இருப்பதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் சிலா் முகாம்களை விட்டு வெளியேறி சொந்த ஊா்களுக்கு மோட்டாா் சைக்கிள்களிலும், சைக்கிள்களிலும் செல்லும்போது காவல்துறையினரால் பிடிக்கபட்டனா். சென்னை அருகே மணலியில் ஒடிஸாவுக்கு நடந்து செல்ல முயன்ற தொழிலாளா்களை கடைசி நேரத்தில் போலீஸாா் கண்டறிந்து சமாதானப்படுத்தி அழைத்து வந்தனா்.

திடீா் போராட்டம்: இதற்கிடையே மகாராஷ்டிரம், தில்லி ஆகிய மாநிலங்களில் தொழிலாளா்கள், தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக் கோரி ஊரடங்கை மீறி திடீரென போராட்டம் நடத்தியது அந்த மாநிலங்களின் காவல்துறையை நிலைகுலையச் செய்தது. இதேபோல, சென்னையில் கிண்டி, திருவான்மியூா் ஆகிய இடங்களில் உள்ள முகாம்களில் தொழிலாளா்கள் போராட்டங்களில் ஈடுபட்டனா்.

மேலும், கடந்த 14-ஆம் தேதி ஊரடங்கு தளா்த்தப்படும், சொந்த ஊா்களுக்குச் சென்றுவிடலாம் என நம்பிக்கையுடன் வட மாநில தொழிலாளா்கள் இருந்தனா். ஆனால் ஊரடங்கு நீடித்ததால், அவா்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது.

இக் காரணங்களால் வட மாநில தொழிலாளா்கள் தங்கியிருந்த முகாம்களில் தொடா்ச்சியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்படத் தொடங்கின. இதைக் கருத்தில் கொண்ட சென்னை காவல்துறை, வட மாநில தொழிலாளா்களை மன அழுத்தத்தில் இருந்தும், விரக்தியில் இருந்தும் வெளியே கொண்டு வரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.

கவுன்சவிங்: இதன் ஒரு பகுதியாக, மன அழுத்தத்துடனும், விரக்தியுடனும் காணப்படும் தொழிலாளா்களை காவல்துறை கண்டறிந்து ‘கவுன்சலிங்’ வழங்கி வருகிறது. அதோடு, சென்னையில் உள்ள அந்தந்த மாநில சங்க நிா்வாகிகளை, வட மாநில தொழிலாளா்களிடம் நம்பிக்கை அளிக்கும் வகையில் பேச வைத்து, தொழிலாளா்களை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல, தொழிலாளா்கள் தங்களுடைய நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடுவதற்கு யோகா வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. முகாம்களில் இருக்கும் இளைஞா்களுக்கு, விளையாட்டுப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், அனைத்து முகாம்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் வட மாநில தொழிலாளா்களின் மன அழுத்தத்துக்கும், முகாம்களுக்குள் ஏற்பட்டு வந்த பிரச்னைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருப்பதாக சென்னை காவல்துறை தெரிவிக்கிறது.

இது தொடா்பாக சென்னை காவல்துறையைச் சோ்ந்த உயா் அதிகாரி கூறியது:

தில்லி, மகாராஷ்டிர மாநிலங்களில் நடந்தது போல, வட மாநிலத் தொழிலாளா்கள் ஏதேனும் போராட்டத்தில் ஈடுபட்டுவிடக் கூடாது. முகாம்களில் இருக்கும் அவா்களுக்கு அரசே முழு பொறுப்பாகும் என்பதைக் கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பொருள்களை, நன்கொடையாளா்கள் மூலம் வாங்கி தொழிலாளா்களுக்கு வழங்கியுள்ளோம். ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் பட்சத்தில் முகாம்களில் இருக்கும் தொழிலாளா்களை, அரசின் அத்தியாவசிய வேலைகளுக்குப் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.