விருதுநகர் மாவட்டத்தில் மெட்ரிக் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணம் குறித்த விவரங்களை மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் நுழைவு வாயில் பகுதியில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் தனியார் சுயநிதி பள்ளிகளில் முதல் வகுப்பில் நலிவடைந்த மற்றும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவீதம் இடம் ஒதுக்கீடு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதை உடனடியாக அனைத்து பள்ளிகளும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.
இந்த உத்தரவின் அடிப்படையில் முதல் வகுப்பில் எத்தனை இடம், அதில் 25 சதவீதம் என்பது எவ்வளவு என்கிற விவரங்களை, ஒவ்வொரு தனியார் பள்ளியும் நுழைவு வாயிலில் தகவல் பலகையில் வைக்க வேண்டும். அதேபோல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் 8-ம் தேதி தொடங்கி தொடர்ந்து வழங்கப்படுகிறது. அதேபோல், 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை கட்டாயம் விலையில்லாமல் விநியோகம் செய்ய வேண்டும். எனவே குறிப்பிட்ட இடங்களுக்கு மேல் அதிகமாக விண்ணப்பம் செய்திரு்ந்தால் இட ஒதுக்கீட்டு முறையில் 25-ம் தேதி காலை 10.30 மணிக்கு பெற்றோர்கள் முன்னிலையில் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தப்படும். அதையடுத்து, தேர்வானோர் பட்டியலை அன்றைய நாளில் 2 மணிக்கு பள்ளி நுழைவு வாயில் பகுதியில் அனைவருக்கும் தெரியும் படியாக தகவல் பலகை வெளியிடப்படும்.
அதையடுத்து, தங்கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் பெயர் பட்டியலின் இரு பிரதிகளை மெட்ரிக்குலேசன் பள்ளி ஆய்வாளர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். அதேபோல் ஒவ்வொரு மெட்ரிக்குலேசன் பள்ளிக்கும் அரசு நிர்ணயித்துள்ள கட்டண பட்டியலையும் அறிவிப்பு பலகையில் இடம் பெறச் செய்து, அதை பெற்றோர்களின் பார்வைக்கு தெரியும் படியாக வெளியிட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.