விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் 3 பேர் சிறப்பிடங்களை பெற்றதோடு 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.


விருதுநகர் மாவட்ட குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் 3 பேர் சிறப்பிடங்களை பெற்றதோடு 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர்.
தமிழக அளவில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 15 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் 1986 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கும் வகையிலும், அவர்களை கண்டறிந்து நல் வாழ்வு அளிக்கும் வகையில் கல்வி வசதி ஏற்படுத்தி தருவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலைகள், தீப்பெட்டி ஆலைகள், வியாபார நிறுவனங்கள் மற்றும் நூற்பாலைகளில் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில் சிறப்பு பயிற்சி அளித்து, பள்ளிகளில் சேர்த்து அவர்களுக்கு தேவையான கல்வி உதவித் தொகை வழங்கியும், உயர் கல்விக்கான வாய்ப்பையும் பெற்றுத் தருகிறது. அதேபோல், அவர்கள் தொடர்ந்து பள்ளிகளில் படிப்பதையும் ஆண்டுதோறும் கண்காணித்தும் வருகிறது.
இத்திட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகளில் 73 மாணவ, மாணவிகள் பிளஸ்2 படித்து வந்த நிலையில் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியானது. இத்திட்டத்தில் படித்தவர்கள் மாவட்ட அளவில் சிறப்பிடங்களையும் பெற்றுள்ளனர். திருத்தங்கல் சிறப்பு பள்ளியில் பயின்ற முத்துச்செல்வி 1200-க்கு 1135 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், அதே பள்ளியில் பயின்ற கே.கௌசல்யா 1200-க்கு 1103 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், திருத்தங்கல் நேருகாலனி சிறப்பு பள்ளியில் படித்த ஆர்.அழகுராஜ் 1200-க்கு 1051 மதிப்பெண்கள் எடுத்து 3-ம் இடமும் பெற்றுள்ளார். அதேபோல், 1000 மதிப்பெண்களுக்கு மேல் 7 பேரும் எடுத்துள்ளதோடு, 100 சதவீதம் தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இவர்கள் பட்டாசுகளுக்கு தாள் சுற்றுதல் பணியிலிருந்து மீட்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இத்திட்டத்தில் படித்து முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளை ஆட்சியர் வே.ராஜாராமன் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் திட்ட அலுவலர் நாராயாணசாமி உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...