/

மாவட்ட அளவில் முதலிடம்: மருத்துவராகி சேவை செய்வதே எனது லட்சியம்

மருத்துவராகி சேவை செய்வதே எனது லட்சியம் என மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஆர்.குருசங்கர்

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:27 am

எஸ். பாண்டியன்

மருத்துவராகி சேவை செய்வதே எனது லட்சியம் என மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவன் ஆர்.குருசங்கர் தெரிவித்தார்.

விருதுநகர் பகுதியைச் சேர்ந்த ரவிசங்கர்-ரத்தினகோமதி தம்பதியின் மகன் குருசங்கர். இவரது தந்தை சுங்க அலுவலகத்தில் அதிகாரியாக உள்ளார். இவர் வருவாய் மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவிலும் பாடவாரியாக மொத்தம் 1200-க்கு 1185 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை அன்றைய நாளிலேயே முடித்து விடுவேன். அதேபோல், 1 மாத்திற்கு முன்பிருந்து தேர்வுக்கு தயாராகும் வகையில் பொழுது போக்குகளில் கவனம் செலுத்தாமல் முழுவதும் படிப்பேன். பாடத்தில் சந்தேகம் இருந்தால் ஆசிரியர்களிடம் சென்று உடனே சரி செய்து கொள்வேன். இதுபோன்ற காரணங்களால் தான் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது. எனக்கு சிறு வயதிலேயே டாக்டருக்கு படிக்க வேண்டும் என்பதே ஆசையாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில் சிறந்த மருத்துவராகி பொதுமக்களுக்கு சேவை செய்வேன் என்றார்.

இரண்டாம் இடம் பெற்ற மாணவி: ராஜசேகரன்-மகாலட்சுமி தம்பதியரின் மகள் ஜனனி. இவர் விருதுநகர் பி.எ.சிதம்பர நாடார் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மாணவியாவார். இவர் வணிகவியல் பிரிவில் 1200-க்கு 1182 மதிப்பெண்கள் பெற்று வருவாய் மாவட்ட மற்றும் கல்வி மாவட்ட அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளார். உயர் கல்வியில் சி.ஏ பட்டய கணக்கராக விரும்பியே வணிகவியல் தேர்வு செய்து படித்தேன். மேலும், ஆசிரியர்கள் பள்ளியில் நடத்தும் பாடங்களை புரிந்து கொண்டு ஒவ்வொரு நாளும் எழுதியே படிப்பேன். இதுபோன்ற காரணங்களால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்ததாக குறிப்பிட்டார்.

3-ம் இடம்: விருதுநகரைச் சேர்ந்த திலகர்-விஜயலட்சுமி தம்பதியரின் மகன் டி.ஆகாஷ். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தாயார் வேளாண்மைத்துறையில் அலுவலராக பணியாற்றி வருகிறார். விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் உயிரியல் பிரிவில் 1200-க்கு 1180 மதிப்பெண்கள் பெற்று வருவாய் மாவட்டம் மற்றும் கல்வி மாவட்ட அளவிலும் 3-ம் இடம் பெற்றுள்ளார். பள்ளியில் ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை தவறாமல் படித்து விடுவேன். அதேபோல், தொலைக்காட்சி பார்க்காமல் காலை மற்றும் இரவு நேரங்களில் குறிப்பிட்ட நேரம் படிப்பேன். எனக்கு மருத்துவ நிபுணராக வேண்டும் என்பதே நோக்கம் என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.