/

விருதுநகர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமா?

விருதுநகர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மழையால் கழிவு நீரோடு சேரும், சகதியாக இருப்பதால் பயணிகள் பேருந்துகள் ஏற முடியாமல் அவதிப்படுவதால் விரைவில் சீரமைக்க

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:16 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மழையால் கழிவு நீரோடு சேரும், சகதியாக இருப்பதால் பயணிகள் பேருந்துகள் ஏற முடியாமல் அவதிப்படுவதால் விரைவில் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் பகுதியில் செவ்வாய்கிழமை பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலையில் திடீரென கருமேகம் சூழ்ந்து பரவலான மழை பெய்தது. இதனால் நகர் பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மழையால் சாலைகளிலும், தெருக்களிலும் பெருக்கெடுத்து கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில், காந்திரபுரம், கச்சேரி சாலை, பஜார் சாலை, தந்திமரத்தெரு, மீனாம்பிகை பங்களா, இந்திரா நகர் உள்ளிட்ட மேடான பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும், தாழ்வான பகுதியாக உள்ள பழைய பேருந்து நிலையத்தில் குளம்போல் தேங்குகிறது.

பொதுவாக நகராட்சி பகுதிகளில் பெரும்பாலும் திறந்த வெளிக்கழிப்பறைகளை கழிவு நீர் வாய்க்காலில் விடுவதால், மழை நீரோடு சேர்ந்து மனிதக் கழிவுகளும் தெருக்களில் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துவதால் நடந்து செல்ல முடியாத நிலை இருக்கிறது. ஒவ்வொரு முறை மழையின் போதும் கழிவு நீரோடு மழை நீர் கலந்து தேங்குவது என்பது தொடர் கதையாகி வருவதால் வெளியூர்களில் இருந்து வரும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். இதுபோன்ற நெருக்கடியான நிலையை தவிர்க்கும் வகையில் நிரந்தர தீர்வு காண்பதற்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இது தொடர்பாக பேருந்து நிலையத்திற்குள் கடை நடத்தி வரும் ஒருவர் கூறுகையில், இப்பேருந்து நிலையம் அமைத்த நாளில் இருந்து இதுபோன்று கழிவு நீர்தேங்குவது என்பது வாடிக்கையாக இருக்கிறது. மேலும், மழையால் கழிவு நீர் தேங்கினால் வடிந்து செல்வதற்கு சுமார் 1 மணிநேரம் ஆகிறது. இதனால் பேருந்து நிலையத்திற்குள் நிற்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுவதால் சுகாதாரக் கேடுகளுக்கும் வாய்ப்பிருக்கிறது. இதை தடுக்கும் வகையில் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றார். 

இது தொடர்பாக நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில், பழைய பேருந்து நிலையத்தி்ல் நூற்றாண்டு நிதி மூலம் ரூ.75 லட்சம் மராமத்து பணிகளுக்காக  ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியின் மூலம் கழிவு நீர் தேங்காத வகையில் ஒன்றரை அடி உயரத்திற்கு பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி அடுத்த வாரம் தொடங்கி நடைபெற இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.