விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில் மகளிர் அங்காடிகள் அமைக்க ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் சார்பில் ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பல்வேறு பொருள்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே அவர்கள் தயாரித்த பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில் ஊரக வாழ்வாதார இயக்க திட்டம் மூலம் மகளிர் அங்காடிகள் அமைக்கப்பட இருக்கிறது. அதன் அடிப்படையில் இம்மாவட்டத்தில் விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதியில் தலா ரூ.5 லட்சம் வீதம் 3 மகளிர் அங்காடிகள் அமைக்கப்பட இருக்கிறது.
இந்த அங்காடி மகளிர் கூட்டமைப்புக் குழுக்களைச் சேர்ந்த நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் அனைத்து வகையான பொருள்களையும் அங்காடியில் கொடுத்தால் விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும்.
தற்போது, இந்த அங்காடிகள் அமைப்பதற்கான இடத்தேர்வில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணி முடிந்ததும் அங்காடிகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.