திமுகவை நெருங்கும் காங்கிரஸ்: கடலூரில் களம் காண விரும்பும் அழகிரி
திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்பு இருக்கும் என கருதப்படும் நிலையில் கடலூர் மக்களவை தொகுதியில் மீண்டும் களம் காண இப்போதைய எம்பி கே.எஸ்.அழகிரி தீவிர


திமுக-காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே மீண்டும் கூட்டணிக்கான வாய்ப்பு இருக்கும் என கருதப்படும் நிலையில் கடலூர் மக்களவை தொகுதியில் மீண்டும் களம் காண இப்போதைய எம்பி கே.எஸ்.அழகிரி தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார்.
2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி, தன்னை எதிர்த்து போட்டியிட்ட, இப்போது வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சராக உள்ள எம்.சி.சம்பத்தை விட 23,496 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றார்.
காங்கிரஸ் உடனான கூட்டணியை திமுக முறித்துக்கொண்ட பிறகு, தமிழகத்தில் இப்போதுள்ள காங்கிரஸ் எம்பிகள் பலரும் வரும் மக்களவை தேர்தலில் போட்டியிடமாட்டார்கள் என்ற பேச்சு பரவலாக இருந்தது. இதனை ஆமோதிக்கும் வகையில் மக்களவை தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் வயதில் மூத்தவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசினார்.
அதிமுக நாற்பதும் நமதே முழக்கத்தோடு இரு கம்யூனிஸ்ட்களை கூட்டணியில் இணைத்துக்கொண்டு தேர்தல் பணியை தொடங்கிவிட்டது. திமுகவை பொறுத்தவரை விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை இணைத்துக்கொண்டு தேமுதிக கட்சியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரதமரை சந்திக்க தேதி கேட்டுள்ளார். இந்த சந்திப்பு தேமுதிக காங்கிரஸ் கூட்டணியை முடிவு செய்யும் சந்திப்பாக இருக்க கூடும் என்றும், மேலும் தங்கள் அணியை வலிமையாக்க மீண்டும் திமுகவை கூட்டணிக்குள் கொண்டுவரவும் காங்கிரஸ் மேலிடத்தலைவர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
திமுக அணியில் இப்போது உள்ள கட்சிகளோடு தேமுதிக, காங்கிரஸ் கட்சிகள் சேரும் பட்சத்தில் இந்த கூட்டணி வலிமையானதாக இருக்கும். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டணிக்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளதாகவே கருதப்படுகிறது. திமுக தலைவர் கருணாநிதி- மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா சந்திப்பு, ராகுல்காந்தி-திருமாவளவன் சந்திப்பு போன்ற நிகழ்வுகள் கூட்டணியை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளதாக காங்கிரஸார் கூறுகின்றனர்.
இந்த நிலையில் தான் வலிமையான கூட்டணிக்கு வாய்ப்புள்ளதால், கடலூர் தொகுதியை மீண்டும் பெற்றுவிட இப்போதுள்ள எம்பி கே.எஸ்.அழகிரி முயற்சி மேற்கொண்டுள்ளார். இவர் கடலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் விருப்பமனு அளித்துள்ளனர்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கடலூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அழகிரி 3,20,437வாக்குகளும், அதிமுக சார்பில் போட்டியிட்ட எம்.சி.சம்பத் 2,96,941 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட எம்.சி.தாமோதரன் 93,172 வாக்குகளும் பெற்றனர்.இந்த தொகுதியில் தனித்து போட்டியிட்டு 93 ஆயிரம் வாக்குகள் பெற்ற தேமுதிக காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவதும், கடந்த முறை அதிமுக அணியில் இருந்த பாமக இப்போது தனியாக தனது வேட்பாளரை இந்த தொகுதியில் நிறுத்தியுள்ளதும், அதிமுக வேட்பாளரை வலிமையுடன் எதிர்கொள்ள உதவும் என அழகிரி நம்புவதாக ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
இந்த மாவட்டத்தில் திமுகவினரோடு அழகிரி மோதல்போக்கை பின்பற்றியதி்ல்லை என்றும், இதனால் அக்கட்சியினரோடு இணைந்து தேர்தலை சந்திப்பதில் சிக்கல் இருக்காது என்கின்றனர் அழகிரி ஆதரவு காங்கிரஸார். காங்கிரஸோடு திமுக கைகோர்த்து, அதில் தேமுதிகவும் இருந்தால் கடலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் களம் நிச்சயம் அனல் பறக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...