திருநெல்வேலி மாவட்டம், தென்காசி அருகே வாக்காளர் பட்டியலில் 800 வாக்காளர்களுக்கு பெயர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, பின்னர் வாக்குப்பதிவு நடைபெற்றது.
தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் தென்காசி அருகே வல்லம் கிராமத்தில் 59 மற்றும் 60 ஆம் எண் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட வாக்காளர்கள், வாக்குச்சாவடி முகவர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது.
பூத் சிலிப் பெற்ற வாக்காளர்கள் மேற்கண்ட மையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க சென்றனர். சுமார் 800 வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பூத் சிலிப் வழங்கப்பட்டிருந்த போதிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் வல்லம் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு பிரதான சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.