/

கருப்பசாமி பாண்டியன் செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண்

மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கருப்பசாமி பாண்டியன் இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:01 pm

பா.​ பிரகாஷ்

மதுரை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்ற கருப்பசாமி பாண்டியன் இன்று காலை செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் கருப்பசாமி பாண்டியன் மீது குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து அவரைக் கைது செய்ய போலீஸார் முயற்சி மேற்கொண்டனர். இந்நிலையில் தலைமறைவான கருப்பசாமி பாண்டியன் பின்னர் மதுரையில் உள்ள உயர்நீதிமன்றக் கிளையை அணுகி ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் இன்று காலை அவர் செங்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். செங்கோட்டை நீதிமன்ற நீதிபதி மாதவ. ராமானுஜம், தினசரி குற்றாலம் காவல் நிலையத்தில் முற்பகல் 10.30க்கு வந்து 7 நாட்களுக்கு ஆஜராகி கையெழுத்திட உத்தரவு பிறப்பித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருப்பசாமி பாண்டியன், எனது 42 ஆண்டுகால பொதுவாழ்க்கையில் என்னுடைய நடவடிக்கைகள் கட்சியினருக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகத் தெரியும். என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒரு கருவியாகப் பயன்படுத்தி பொய்ப் புகார் கொடுக்க வைத்து பழிவாங்கியுள்ளனர். நான் களங்கமற்றவன் என்பதை நீதிமன்றத்தில் சட்டபூர்வமாக நிரூபிப்பேன். இது குறித்து கட்சித் தலைவர், மற்றும் ஸ்டாலின் ஆகியோரிடம் விளக்கியுள்ளேன். அவர்கள் என்னைப் புரிந்து கொண்டு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதே போல் கட்சித் தொண்டர்களும் என் மீது நம்பிக்கை வைப்பார்கள் என்று நம்புகிறேன். நான் 65 வயது கடந்தவன். நான் கடுகளவும் யாருக்கும் தீங்கு செய்ததில்லை. எனக்கு திருமண வயதில் 3 பேத்திகள் உள்ளனர். மேலும் உச்சி முதல் உள்ளங்கால் வரை எனக்கு நோய் உள்ளது. இந்தப் பொய்ப் புகாரை சட்டப்படி சந்திக்கத் தயாராக உள்ளேன் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.