விருதுநகர் பகுதியில் உள்ள கன்னிசேரி பகுதியில் திண்டுக்கல் தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறையின் இணை இயக்குநர் காளியண்ணன் தலைமையில் இக்குழுவினர் ஆய்வு செய்தனர். அங்கு தொழிற்சாலை விதிமுறைப்படி பட்டாசு ஆலைகள் இயங்குகிறதா, உரிமத்தில் குறிப்பிட்டுள்ள அறைகளுடன் இயங்குகிறதா, ஆள்களை அதிகமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபடுத்துகிறார்களா, இதுபோன்ற ஆலைகளில் 55 வயசுக்கு மேற்பட்டவர்கள் மருந்துக் கலவை உள்ளிட்ட இடங்களில் பணி செய்கிறார்களா, அலுமினியம் பவுடர், நைட்ரேட் உள்ளிட்ட வேதி மருந்துகள் அதிகளவில் இருப்பு வைக்கப்படுகிறதா என்பது குறித்து வைப்பறையை ஆய்வு செய்தனர்.இந்த ஆலைகளில் தயார் செய்யும் பட்டாசுகளில் வேதி பொருள்கள், கரிமருந்துகள் சம அளவில் பயன்படுத்தப்படுகிறதா, சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் அதிக அளவு வெடி மருந்துக் கலவை கலக்கப்படுகிறதா என்பது குறித்து தீவிரமாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், இதேபோல், வச்சக்காரப்பட்டி, துளுக்கப்பட்டி, தம்மநாயக்கன்பட்டி, சின்னவாடி, சின்னராமலிங்காபுரம் உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆலைகளில் ஆய்வு செய்தனர்.