/

அஇசமக சார்பில் தமிழகம் முழுவதும் 8ம்தேதி ஆர்ப்பாட்டம்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி அஇசமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 6:37 pm

பா.​ பிரகாஷ்

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் 8ம் தேதி அஇசமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறி்த்து அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் எம்.எல்.ஏ. திங்கள்கிழமை விடுத்துள்ள அறிக்கையி்ல் கூறியிருப்பதாவது, இலங்கையி்ல் நடந்தேறிய இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இலங்கை அரசின் மீதும் குறிப்பாக இலங்கை அதிபர் ராஜபட்சே மீதும் குற்றச்சாட்டுகள் உலகெங்கிலும் இருந்து வருகிறது.

 2011ம் ஆண்டு ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் நடந்து முடிந்த காமன்வெல்த் மாநாட்டில் அடுத்த மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்ட போதே இந்தியா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்க வேண்டும்.

தற்சமயம் இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று கடுமையான  கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.மேலும் தமிழக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் இதை வலியுறுத்தி வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழிந்து நிறைவேற்றி உலகத்தமிழர்கள் அனைவரது ஒட்டுமொத்த உணர்வுகளை உலகுக்கு உணர்த்தி உள்ளார்.

மத்திய அரசு இத்தீர்மானத்தை மதிக்காமலும் தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமலும் மெளனம் சாதித்து வருவதோடு காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டோம் என்று தீர்க்கமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருப்பது தமிழர்களி்ன் வேதனைகளையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்துவதாகவே உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக சேனல்4ல் ஒளிபரப்பப்பட்ட தமிழ் ஈழப் பெண் இசைப்ரியாவின் கொடூர மரணம் கல்மனங்களைக் கூட கரைய வைப்பதாக இருக்கும் போது மத்திய அரசின் மெத்தனம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயலாக உள்ளது.

எனவே மத்திய அரசின் போக்கை கண்டித்தும் இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமரும், இந்தியாவின் பிரதிநிதிகளும் பங்கேற்க கூடாது என்பதை வலியுறுத்தியும் சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகளிலும் வரும் 8ம் தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.