/

விருதுநகர் அருகே தனியார் கேப் வெடி ஆலையில் தீ விபத்து:5 பேர் காயம்

விருதுநகர் அருகே தனியார் கேப் வெடி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் தொழிற்சாலை

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:23 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தனியார் கேப் வெடி ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இதில், போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவதற்குள் தொழிற்சாலை நிர்வாகத்தினர் விபத்து நடக்காததது போல் சுத்தம் செய்து வைத்திருந்தனர். 

சிவகாசி அருகே பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் விருதுநகர் அருகே முதலிப்பட்டியில் தனியார் கேப் வெடி ஆலையை நடத்தி வருகிறார். இந்த ஆலையில்  50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு இன்று காலையில் வழக்கம் போல் இயந்திரத்தின் மூலம் கேப் வெடி தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 12 மணி அளவில் இயந்திர உராய்வினால் திடீரென கேப் வெடி வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில், கேப் வெடிகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இ.சொக்கலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அழகுமாரி(29), சதுரகிரியின் மனைவி தமிழ்ச்செல்வி(35), முருகனின் மனைவி முருகேஸ்வரி(34), சக்திவேலின் மனைவி வீரம்மாள்(35) மற்றும்  சண்முகவேலின் மனைவி திரிசங்கு(40) காயம் அடைந்தனர்.

இந்த விபத்து குறித்து எதுவும் வெளியில் தெரியாமல் இருப்பதற்காக சம்பவ இடத்திற்கு போலீஸார் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோர் வருவதற்குள் காயம் அடைந்தவர்களை ஆலை நிர்வாகத்தினர் மீட்டு சிவகாசி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து, கேப் வெடி விபத்து நடந்த இடத்தையும், இயந்திரத்தையும் சுத்தப்படுத்தி வைத்திருந்தனர். பின்னர் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீஸார் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும், இது தொடர்பாக ஆலை உரிமையாளர் தேசிங்குராஜா மற்றும் மிளகாய்பட்டியைச் சேர்ந்த ஆலையின் போர்மேன் சோலைமலை ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.