/

குடிதண்ணீர், அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி காலிகுடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்தது சமத்துவபுரம். இங்கு கடந்த ஒரு மாதமாகவே குடிதண்ணீர் விநியோகம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதோடு, அருகில் 2 கி.மீ

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:23 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே குடிதண்ணீர் மற்றும் அடிப்படை வசதி செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்  போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், செங்கோட்டை ஊராட்சியைச் சேர்ந்தது சமத்துவபுரம். இங்கு கடந்த ஒரு மாதமாகவே குடிதண்ணீர் விநியோகம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். அதோடு, அருகில் 2 கி.மீ தூரம் நடந்து சென்று செங்கோட்டை, சின்னப்பநாயக்கன்பட்டி மற்றும் செங்குன்றாபுரம் பகுதிகளில் உள்ள  பம்ப்செட் தோட்டங்களில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தி வந்தனர். எனவே ஒவ்வொரு நாளும் குடிதண்ணீர் எடுப்பதற்கே நேரம் சரியாகி விடுவதால் பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் மற்றும் கூலி வேலைக்கும் செல்ல முடியாத நிலையேற்பட்டது. மேலும், தெருக்களிலும் போதுமான கழிவு நீர் வாய்க்கால் மராமத்து மற்றும் சமத்துவபுர சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது.

இது குறித்து செங்கோட்டை ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தும் இதுவரையில் குடிதண்ணீர் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரம் அடைந்த சமத்துவபுரம் கிராம மக்கள் விருதுநகர்-வத்திராயிருப்பு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து சம்பவ இடத்திற்கு விருதுநகர் வட்டாட்சியர் மங்களநாதன், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் சுலைமான், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சிவராம்குமார், ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி மற்றும் வட்டார ஊராட்சி உறுப்பினர் வேலாயுதம் உள்ளிட்டோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையினர் ஈடுபட்டனர். அப்போது, பொதுமக்கள் இது தொடர்பாக ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். இதுவரையில் குடிதண்ணீர் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

அதையடுத்து உடனே குடிநீர் வாகனம் மூலமும், மாலைக்குள் குடிநீர் மேல்நிலைத்தொட்டியில் இருந்து விநியோகம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டுச் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியல் போராட்டத்தினால் விருதுநகரிலிருந்து வத்திராயிருப்பு, ராஜபாளையம் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பஸ் போக்குவரத்து அரைமணிநேரம்  பாதிக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.