/

மத்தியில் காங்கிரஸ்-பாஜக அல்லாத மாற்று அரசியல் கொண்டு வரவேண்டும்: டி.ராஜா

மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ்-பாஜக அல்லாத மாற்று அரசியல் கொண்டு வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:17 pm

எஸ். பாண்டியன்

மக்களவை தேர்தலுக்கு பின் காங்கிரஸ்-பாஜக அல்லாத மாற்று அரசியல் கொண்டு வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுதுணையாக இருக்கும் என அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

விருதுநகரில் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுக்குழு கூட்டம் புல்லலக்கோட்டைச் சாலையில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினர் டி.ராஜா கலந்து கொண்டார்.இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் தவறான கொள்கைகளால் 5 சதவீதம் பொருளாதார வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயம் உற்பத்தி பாதிப்பும், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது, உணவுப் பொருள்களின் விலையும் உயர்ந்து வருகிறது. நாட்டிற்கு மொத்தம் 17 பில்லியன் வரையில் தேவைப்படுகிறது. இத்தேவையை பூர்த்தி செய்வதற்கு அன்னிய முதலீடு மூலமும், கடன் வாங்கியும் சமாளித்து வருகின்றனர். இதுபோன்ற அரசு கொள்கைகள் மாற்றப்பட வேண்டும்.

கார்ப்ரேட் நிறுவனங்களின் கொள்கைகள் தான் அரசின் கொள்கையாக இருக்கிறது. இந்த தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளிப்பதால் தான், ஏழை எளிய மக்களுக்கான சலுகைகள் குறைந்து வருகிறது. இக்கொள்கைகளை கட்டயாம் மாற்ற வேண்டும். மத்திய அரசியலில் பாஜக-காங்கிரஸ் கட்சிகளில் கொள்கைகள் ஒன்றாகவே தான் உள்ளது. அதனால், வருகிற மக்களவை தேர்தலுக்கு பின்னர் இரண்டு கட்சிகள் அல்லாத மாற்று அரசியல் கொண்டு வருவதற்கு இந்திய கம்யூனிஸ்ட் உறுதுணையாக இருக்கும். 

மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைகள் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கும் வகையில் உள்ளது. தற்போது, உணவு பாதுகாப்பு மசோதாவை மக்களையில் கொண்டு வந்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதோடு, மக்களவையிலும் விவாதம் செய்து மாற்றம் கொண்டு வரவேண்டும். இலங்கையில் நடைபெற இருக்கிற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து தனித்து முடிவு எடுக்க கூடாது. ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்னை இருந்து வருகிறது. அதனால், மத்திய அரசு தமிழக அரசோடு கலந்தாய்வு செய்து தான் முடிவு எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்தார். 

அப்போது உடன் தென்காசி மக்களவை உறுப்பினர் லிங்கம், முன்னாள் மக்களவை உறுப்பினர் அழகிரிசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.