/

மதுரை அரசு மருத்துவமனையில் உபகரணங்கள் இல்லை:தாமதமாகும் அறுவைச் சிகிச்சைகள்!

மதுரை அரசு மருத்துவமனையில் முக்கியமான உபகரணங்கள் இல்லாததால் அறுவைச் சிகிச்சைகள் தாமதமாவதாகப் புகார் எழுந்துள்ளது.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:43 pm

ஜெயப்பாண்டி

மதுரை அரசு மருத்துவமனையில் முக்கியமான உபகரணங்கள் இல்லாததால் அறுவைச் சிகிச்சைகள் தாமதமாவதாகப் புகார் எழுந்துள்ளது.

தென் மாவட்டங்களுக்கு மிக முக்கிய மருத்துவ சிகிச்சை கேந்திரமாக இருப்பது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. தினமும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை வெளி நோயாளிகளாகச் சிகிச்சை பெற வருகின்றனர். மேலும், 3 ஆயிரம் பேர் உள்நோயாளியாகச் சிகிச்சை பெறுகின்றனர்.

மருத்துவமனையில் 70-க்கும் மேற்பட்ட சிகிச்சைத் துறைகள் உள்ளன. 17 அறுவைச்சிகிச்சை அரங்குகள் உள்ளன. இவற்றில் தினமும் சுமார் 200 அறுவைச் சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன.

ஒரு நோயாளிக்கான அறுவைச் சிகிச்சையில் அந்தந்த துறை மருத்துவப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர், மயக்கவியல் மருத்துவர், மருத்துவப் பட்டமேற்படிப்பு மாணவர்கள் இருவர், அறுவைச் சிகிச்சை அறை செவிலியர் 2 பேர் என மொத்தம் 7 பேர் ஈடுபடுகின்றனர்.

அறுவைச் சிகிச்சைக்கு முக்கியமாக மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கான கோட் எனப்படும் அறுவைச் சிகிச்சை ஆடையும், அறுவைச் சிகிச்சை செய்துகொள்ளும் நோயாளிக்கு மயக்க மருந்து செலுத்தப் பயன்படும் எண்டோ டிராக்கல் டியூப் (ங்ய்க்ர் ற்ழ்ஹஸ்ரீட்ங்ஹப் ற்ன்க்ஷங்) எனப்படும் சிறிய உபகரணமும், நோயாளிக்கு சுவாசக் காற்றை அளிக்கப் பயன்படும் வெண்டிலேட்டர் குழாயில் பொருத்தப்படும் "மைக்ரோ பில்டர்' எனப்படும் சாதனமும் முக்கியத் தேவைகளாகும்.

அறுவைச் சிகிச்சையில் நேரடியாகச் செயல்படும் 7 பேருக்கும் பச்சை நிறத்தில் கோட் எனப்படும் உடையானது மருத்துவமனை நிர்வாகம் மூலமே அளிக்கப்படுகிறது. பருத்தித் துணியினால் ஆன இந்த ஆடை ஒன்றில் விலை ரூ.150. ஆடையைத் தயாரிப்பதற்காக மருத்துவமனை வளாகத்திலேயே டெய்லர்கள் பிரிவும் செயல்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது இந்த பச்சை நிற கோட் உடை பற்றாக்குறையாக இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தினமும் ஒவ்வோர் அறுவைச் சிகிச்சைக்கும் குறைந்தது 40 உடைகள் தேவைப்படுவதாகவும், ஆனால் பாதியளவே உடைகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஓர் அறுவைச் சிகிச்சையின்போது பயன்படுத்திய உடையை அடுத்த அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்தக் கூடாது. நோய்த் தொற்று உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வோர் அறுவைச் சிகிச்சைக்கும் தனித் தனி உடையையே பயன்படுத்த வேண்டும். ஆனால், உடைப் பற்றாக்குறை காரணமாக தினமும் 7 முதல் 10 அறுவைச் சிகிச்சைகள் வரை தள்ளிவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

சாதனங்கள் இல்லை: அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிகளுக்குத் தேவைப்படும் மயக்க மருந்தைச் செலுத்துவதற்கான எண்டோ டிராக்கல் டியூப் ஒன்றின் விலை ரூ.75. இந்த டியூப்பானது 2.5 மில்லி மீட்டரிலிருந்து 8.10 மில்லி மீட்டர் வரை நீளமுடையது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறுவைச் சிகிச்சையின் போது மயக்க மருந்து செலுத்தத் தேவையான இந்த டியூப் தற்போது மருத்துவமனையில் இருப்பு இல்லை என்பதால், நோயாளிகளே அதை வாங்கித் தர கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

அதேபோல, நோயாளிக்கு செயற்கை சுவாசக் காற்று செலுத்தும்போது தேவைப்படும் மைக்ரோ பில்டர் ஒவ்வொரு நோயாளிக்கும் தனித்தனியாக வாங்க வேண்டும். அந்த பில்டர் சாதனமும் மருத்துவமனையில் இருப்பு இல்லையாம். இதையும் நோயாளிகளே வாங்கித் தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகளே காரணம்: அரசு மருத்துவமனையில் நடைபெறும் முதல்வரின் காப்பீடு திட்ட சிகிச்சையின் மூலம் மருத்துவமனை நிர்வாகத்துக்கு சுமார் ரூ.4 கோடி வரை நிதி கிடைத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்த நிதியை முறையாக மருத்துவமனைக்கான மருந்து, மாத்திரைகள், உபகரணங்கள் வாங்க நிர்வாகத்தினர் பயன்படுத்துவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

அரசு போதிய நிதியை அளித்தும் மருத்துவமனையில் உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்படுவதற்கு நிர்வாகத்தில் உள்ளவர்களே காரணம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைச் சீர்படுத்திட முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.

சுகாதார அமைச்சர் இன்று ஆய்வு

மதுரை மாவட்டத்தில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் வி.எஸ். விஜய் புதன்கிழமை ஆய்வு செய்கிறார்.

மேலூர் பஸ் நிலையம் அருகே இருந்து துவங்கும் டெங்கு விழிப்புணர்வுப் பேரணியை அமைச்சர் விஜய் துவக்கி வைக்கிறார்.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

அதிகரிக்கும் அறுவைச் சிகிச்சைகள்

மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் 1,32,397 பேருக்கு அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. இச் சிகிச்சைகளில் பெரும்பாலானவை பிரசவ சிகிச்சை மற்றும் அவசரச் சிகிச்சை என்பது குறிப்பிடத்தக்கது.

2008-ல் 26,843 பேருக்கும், 2009-ல் 24,943 பேருக்கும், 2010-ல் 26,987 பேருக்கும், 2011-ல் 29,124 பேருக்கும் அறுவைச் சிகிச்சைகள் நடந்துள்ளன. நடப்பாண்டில் ஜனவரி முதல் அக்டோபர் வரையில் மொத்தம் 24,500 பேருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.

போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் 2009-ல் அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைகள் மிகவும் குறைந்துள்ளன. கடந்த 2010, 2011 ஆம் ஆண்டுகளில் நடந்த அறுவைச் சிகிச்சைகளைவிட நடப்பாண்டில் அறுவைச் சிகிச்சைக்கு கூடுதலாக நிதி இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கடந்த திமுக ஆட்சியில் அரசு காப்பீடு திட்டமானது தனியார் மருத்துவமனைகளுக்கே அதிக பயனளிப்பதாக இருந்தது. ஆனால், அதிமுக அரசு தற்போது அரசு மருத்துவமனைகளுக்கே அதிக பயனளிக்கும் வகையில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆகவே, இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தியும், தேவையான உபகரணங்களை வாங்கியும் ஏழை நோயாளிகளுக்கு மிகத் தரமான சிகிச்சை அளிக்க முடியும் என்பது மருத்துவர்களது கருத்து. ஆனால், நிர்வாகத்தில் உள்ளோர் அரசு மருத்துவமனையை மேம்படுத்தும் நோக்கில் செயல்படவில்லை என்பதே இப்போதைய குறையாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.