/

குறைந்துவரும் நூலக வாசகர்கள்;அதிகரிக்கும் குற்றங்கள்!

மதுரை மாவட்டத்தில் நூலகங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், அதேசமயம் குற்றச்செயல்களில்

News image
Updated On :2 ஜனவரி 2024, 8:05 pm

ஜெயப்பாண்டி

மதுரை மாவட்டத்தில் நூலகங்களுக்குச் செல்வோரின் எண்ணிக்கை குறைந்து வருவதும், அதேசமயம் குற்றச்செயல்களில் ஈடுபடும் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 மதுரை மாவட்டத்தில் மைய நூலகம், குழந்தைகள் மற்றும் பெண்கள் நூலகம், 58 கிளை நூலகங்கள், 58 ஊர்ப்புற நூலகங்கள், 9 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் 127 நூலகங்கள் உள்ளன. இவற்றில் நடமாடும் நூலகம் செயல்படவில்லை.
 கடந்த 4 ஆண்டுகளில் நூலகத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளைக்காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது. மதுரை சிம்மக்கல்லில் உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு தினமும் சுமார் 600 பேர் வருகின்றனர். இவர்களில் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுக்காக தினமும் 80 முதல் 100 பேர் வரை வருகின்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரிவில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்கூட மிகக்குறைந்த எண்ணிக்கையிலே வாசகர்கள் வருகின்றனர். மற்ற நாள்களில் இப்பிரிவானது வெறிச்சோடிக் காணப்படுகிறது.
 நகரில் உள்ள பல கிளை நூலகங்களுக்கு தினமும் 50 பேர் மட்டுமே வருகின்றனர். அதிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகபட்சம் 10 பேர் மட்டுமே வருகிறார்கள். தினசரி, வார, மாத இதழ்களைப் படிக்கும் அளவுக்கு அறிவார்ந்த, இலக்கிய, வரலாற்று, அறிவியல் ஆய்வு நூல்களைப் படிப்போர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
 நூலகத்துக்குச் சென்று படிப்போரைக் காட்டிலும் இணையதளம் மூலம் நூல்களைப் படிப்போர் அதிகம் எனக்கூறலாம். ஆனால், இணையத்தில் செய்திகள், விமர்சனங்கள், தனிநபர் கருத்துகளைப் பதிவு செய்து, படிப்போர் அளவுக்கு நூல்களைப் படிப்போர் இல்லை என்பதே உண்மை.
 வீட்டில் பெண்கள் தொலைக்காட்சிகளில் தொடர்களையும், சிறார்கள் கணினியில் விடியோ கேம் போன்றவற்றையும் விரும்புகின்றனர். கணினியைப் பயன்படுத்தும் குழந்தைகளில் 75 சதவிகிதம் பேருக்கு விடியோ கேம் எனப்படும் விபரீத விளையாட்டுகளே விருப்பமான பொழுதுபோக்காக உள்ளது.
 திருடிவிட்டு தப்பிப்பது, போலீûஸத் தாக்குவது, சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டி விபத்தை ஏற்படுத்துவது, துப்பாக்கியால் சுடுவது எனப் பல விடியோ விளையாட்டு சி.டி.க்கள் ரூ.30-க்கு விற்கப்படுகின்றன.
 இத்தகைய விளையாட்டுகள் கலாசாரத்தை சீரழிப்பதுடன், குற்றச்செயல்களை வீரதீரமாகக் காட்டுகின்றன. இதுபோன்ற அபாய சி.டி. விற்பனையை தடுப்பது அவசியம்.
 அபாய சி.டி. விளையாட்டுகள், நண்பர்களுடன் சுற்றுதல் எனக் குறுகிய வட்டத்திற்குள் சிக்கும் சிறார்கள் நட்புக்காக குற்றங்களில் ஈடுபடுவதைப் பெருமையாகவும், சாகசமாகவும் கருதும் போக்கு உள்ளது. இதனால் செல்போன் திருட்டில் தொடங்கி, நண்பர்களுக்காக அடிதடியில் இறங்கி, கொலைச் சம்பவத்தில் கைதாவது வரை சிறார்களின் பாதை மாறிவிடுகிறது.
 சிறார்களை நல்வழியில் கொண்டுசெல்ல நூலகங்கள் அவசியம். ஆனால், பட்டப்படிப்புடன் நல்ல பணியில் உள்ளவர்கள்கூட தமது குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் செல்லும்போக்கு குறைந்துவிட்டது.
 ஹோட்டல், திரைப்படம், பொழுதுபோக்கு அம்சங்கள் எனக் குழந்தைகளுடன் எப்போதாவது சுற்றிவந்து பொழுதைக்கழிக்கவே பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
 தங்கள் பெருமைக்காகக் குழந்தைகளைப் பிரபல பள்ளியில் சேர்ப்பது, மாலையில் டியூசனுக்கு அனுப்புவதன் மூலம் கூடுதல் மதிப்பெண்களைப் பெறவைப்பதை மட்டுமே பெரும்பாலான பெற்றோர் கடமையாகக் கருதுகின்றனர்.
 குழந்தைகள் நல்லவர்களுடன் பழுகுகிறார்களா?, நல்லவற்றை சிந்திக்கிறார்களா? என்பதைப் பற்றி கவலையின்றி இருக்கிறார்கள். இதனால் நன்கு படிக்கும் சிறார்கள்கூட குற்றச்சம்பவங்களில் சிக்கி திசைமாறுவதைக் காணமுடிகிறது.
 நகரில் கடந்த 5 ஆண்டுகளில் 2,437 திருட்டுகளும், 274 வழிப்பறியும் நடந்துள்ளன. இதில் கைதான குற்றவாளிகளில் 10 பேரில் இருவர் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என்கிறார்கள் காவல் துறையினர்.
 ஆக, குழந்தைகளுக்கு நூலக அறிமுகம் என்பது மிகவும் அவசியம். மதுரைக்குள் 58 கிளை நூலகங்கள் உள்ளன. ஆனால், அந்நூலகங்கள் எந்தந்தப் பகுதியில் உள்ளன, எப்போது திறந்திருக்கும் என்ற விவரங்கள் எங்கும் இல்லை.
 மதுக்கடைகளுக்கு செல்லும் வழிகளைக்கூட சாலையோர அறிவிப்பாக எழுதி வைத்திருக்கும் அரசு அதிகாரிகள் அறிவை வளர்க்கும் நூலகங்களின் இருப்பிடம் குறித்த தகவல் பலகையை வைப்பதில்லை என்பது வருந்தத்தக்கதே.
 சங்கம் வைத்து தமிழ் வளர்த்தது மட்டுமல்ல, தமிழர்களின் கலாசாரத் தலைநகராக விளங்கும் மதுரையின் பெருமை காப்பாற்றப்பட வேண்டும் எனில் நமது குழந்தைகளுக்கு நூலகங்களை அறிமுகப்படுத்துவது அவசியம். இல்லாவிடில் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்னிருந்த அநாகரீக நிலைக்கு நமது எதிர்காலச் சந்ததிகள் சென்றுவிடும் அபாயம் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.