எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வாடிக்கையாளர்கள் குழப்பம்மானியம் அல்லாத சிண்டர் விநியோகம்: விலை ரூ.888.50

ஓராண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் 6 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 3 மாதங்கள் கடந்த நிலையில்

News image
Updated On :2 ஜனவரி 2024, 8:03 pm

ஆர். ஆதித்தன்

ஓராண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் 6 மட்டுமே வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி 3 மாதங்கள் கடந்த நிலையில், 3 சிலிண்டர் பயன்பாட்டுக்குப் பிறகு 4வது சிலிண்டர் பெறுவோருக்கு மானியம் அல்லாத விலையில் வழங்கப்படுகிறது.

ஒரு குடும்பத்திற்கு ஓராண்டுக்கு மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் 6 மட்டுமே வழங்கப்படும் என 2012, செப்டம்பர் 14 ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. 6வது சிலிண்டருக்குப் பிறகு பெறப்படும் மானியம் இல்லாத சிலிண்டரை ரூ.900 கொடுத்து வாங்க வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதனிடையே, மானிய சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6-ல் இருந்து 9 ஆக அதிகரிக்குமாறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்தன. ஆனால், இது குறித்து எந்தவித அறிவிப்பையோ, உத்தரவையோ மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை.

அதேநேரம், ஒரே நபர் பல பெயர்களில் இணைப்பு வைத்திருத்தல், வெவ்வேறு முகவரியில் வெவ்வேறு கேஸ் ஏஜென்சியில் இணைப்பு பெற்றிருப்பதைத் தடுக்கும் வகையில், புதிய கேஸ் இணைப்புக் கேட்போருக்கு மானியம் அல்லாத சிலிண்டர் மட்டுமே வழங்க பெட்ரோலிய அமைச்சகம் உத்தரவிட்டது. இதனால், புதிய கேஸ் இணைப்புக் கோருவோர் ரூ.1,450 டெபாசிட் தொகையுடன் சுமார் ரூ.900 கட்ட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கோவையில் ரூ.888.50: கோவை மாவட்டத்தில் மானியம் அல்லாத சிலிண்டர் விலை ரூ.888.50 ஆக உள்ளது. இதுதவிர சிலிண்டர் டெலிவரி அளிக்க வரும் ஊழியர்களுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கொடுக்க வேண்டி உள்ளது.

ஏற்கெனவே 3 சிலிண்டர் பெற்றவர்கள் 4வது சிலிண்டர் பெற கேஸ் ஏஜென்சிகளை தொடர்பு கொண்டால், மானியம் அல்லாத சிலிண்டர் தான் வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் குழப்பமடைந்துள்ளனர். ÷மேலும், மத்திய அரசு தருவது 6 சிலிண்டரா அல்லது 9 சிலிண்டரா என்பதில் தெளிவில்லாமலும் உள்ளனர்.

இது தொடர்பாக, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மாவட்ட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் ஏ.பிரீதவள்ளி கூறியது: ஓராண்டுக்கு மானிய சிலிண்டர்கள் 6 மட்டுமே வழங்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் அரையாண்டு சென்றுவிட்டது. 2012 செப்.14 ஆம் தேதியில் இருந்து உத்தரவு அமலில் உள்ளதால், அந்த தேதியில் இருந்து 3 சிலிண்டருக்குப் பிறகு 4வது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அல்லாத விலையில் (ரூ.888.50) தான் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த விலை மாவட்டத்திற்கு மாவட்டம் மாறுபடும். எங்கள் ஏஜென்சியில் 500 பேருக்கு மானியம் அல்லாத சிலிண்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் மானிய சிலிண்டர் விலை ரூ.398 ஆக உள்ளது.

பொதுமக்களுக்கும் அரசின் அறிவிப்பு புரியவில்லை. அவர்கள் விநியோகஸ்தர்கள் ஏமாற்றுகின்றனர் என்று சந்தேகப்படுகின்றனர். போலி இணைப்புகளை களையும் வகையில் புதிய கேஸ் இணைப்பு நிறுத்தப்பட்டது. அக்டோபர் முதல் புதிய கேஸ் இணைப்புக் கோரும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அல்லாத சிலிண்டர் மட்டுமே வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது, புதிய கேஸ் இணைப்பு பெறுவோரின் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன. இதற்காக டீ டூப்ளிகேஷன் சாப்ட்வேர் மூலம் போலி இணைப்புகள் எளிதாகக் கண்டறியப்படுகின்றன. இந்த சாப்ட்வேரில், புதிய கேஸ் இணைப்புக் கேட்போரின் விவரம் சரிபார்க்கப்படும். அதில் அவர் எந்த இணைப்பையும் பெறவில்லை என்ற தகவல் (கிளியர் லிஸ்ட்) வந்த பிறகு தான் மானியத்துடன் கூடிய சிலிண்டர் வழங்கப்படும். புதிய இணைப்புக்கு மானியம் அல்லாத சிலிண்டர் பெற்றவர்கள், அந்த இணைப்பை சரண்டர் செய்து மானிய விலையில் சிலிண்டர் பெறலாம் என்றார்.

இது தொடர்பாக, ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த விஜய் ஆடலரசன் கூறியது: நான் செப்டம்பர் தொடங்கி நவம்பர் வரை 3 சிலிண்டர் பெற்றேன். டிசம்பர் மாதத்தில் சிலிண்டர் பெற சென்றபோது, மானியம் அல்லாத சிலிண்டர் தான் வழங்கப்படும் எனத் தெரிவித்தனர். ஓராண்டுக்கு 9 மானிய விலை சிலிண்டர் வழங்கப்படும் என தகவல்கள் வெளிவந்த நிலையில், திடீரென மானியம் அல்லாத சிலிண்டர் வழங்குவது குழப்பத்தில் ஆழ்த்துகிறது.

ஓராண்டுக்கு வழங்கப்படும் சிலிண்டர்கள் ஆறா அல்லது ஒன்பதா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில் பொதுமக்களுக்கு குழப்பம் தான் நீடிக்கும் என்றார்.

6 சிலிண்டர்களின் கணக்கீடு எப்படி?

நிதியாண்டு (2012-13) கணக்கின்படி ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் (முதல் அரையாண்டு) 3 சிலிண்டர்கள் கழிந்துவிட்டன. செப்டம்பர் முதல் 2013 மார்ச் வரையிலான அடுத்த அரையாண்டுக்கு 3 சிலிண்டர்கள் என மொத்தம் மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் 6 என அரசு கணக்கில் கொண்டுள்ளது.

இதன்படி நிதியாண்டு தொடங்கி அரையாண்டு முடிந்துவிட்டதால், 14.9.2012-ஐ கணக்கில் கொண்டு மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்கள் 3 ஆக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

2012 செப்.14 ஆம் தேதிக்குப் பிறகு இதுவரை 3வது சிலிண்டர் முடிந்து 4வது சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அல்லாத சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.