6 ஆண்டுகளில் 6 லட்சம் வழக்குகள்; ரூ.12 கோடி அபராதம்,மதுரை மாநகரின் போக்குவரத்து சிக்கலுக்கு யார் காரணம்?
மதுரை மாநகரில் கடந்த 6 ஆண்டுகளில் போக்குவரத்து விதியை மீறியதாக வாகனங்கள் மீது 6 லட்சத்து 8 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மதுரை மாநகரில் கடந்த 6 ஆண்டுகளில் போக்குவரத்து விதியை மீறியதாக வாகனங்கள் மீது 6 லட்சத்து 8 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், ஏறத்தாழ ரூ.12 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
நகரில், சில ஆண்டுகளாகப் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது. போலீஸôர் எவ்வளவுதான் நடவடிக்கை எடுத்தாலும், வாகனப் பெருக்கத்தாலும், மக்களின் பொறுப்பின்மையாலும் போக்குவரத்து சிக்கல் தீர்ந்தபாடில்லை.
கடந்த 5 ஆண்டுகளில் நகரில் மட்டும் 900 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 300 பேர், இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
போக்குவரத்து விதியை மீறியதாக 2006 முதல் 2012 நவம்பர் வரை தனியார் மற்றும் அரசு பஸ்கள் மீது 8,868 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2006-ல் 4,502 வழக்குகளும், 2007-ல் 1,685 வழக்குகளும் என அதிக அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 605 வழக்குகளும், நடப்பாண்டில் மிகக் குறைவாக 248 வழக்குகளும் பதிவாகியுள்ளன.
லாரிகள் மீது கடந்த 6 ஆண்டுகளில் 70,089 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2010-ல் 11,788 வழக்குகளும், 2011-ல் 10,344 வழக்குகளும், நடப்பாண்டில் 6,173 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆட்டோக்கள் மீது 6 ஆண்டுகளில் 2,27,985 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் 2010-ல் 56,491 வழக்குகள், 2011-ல் 56,744 வழக்குகள் மற்றும் நடப்பாண்டில் 27,862 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மீதான வழக்குகள் எனப் பார்த்தால் வேகமாக செல்லுதல், உரிமம் இல்லாதது, ஹெல்மெட் அணியாதது எனப் பல வகைகளில் வழக்குகள் பதிவாகி உள்ளன. அதன்படி, 6 ஆண்டுகளில் 2,98,382 வழக்குகள் பதிவாகி உள்ளன.
இதில் நடப்பாண்டில், இதுவரை 50 ஆயிரம் வழக்குகள் பதிவாகி உள்ளன. 2007-ல் 53,255 வழக்குகள், 2008-ல் 64,373 வழக்குகள், 2009-ல் 41,209 வழக்குகள், 2010-ல் 32,602 வழக்குகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு 22,341 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
நகரில் போக்குவரத்து விதிமீறலில் இருசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும் அதிகம் இடம் பெற்றிருப்பதையும் போலீஸôர் சுட்டிக் காட்டுகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் போதிய அனுபவமில்லாதவர்களாக இருப்பதும், ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதியை அறியாதவர்களாகவும், வருவாயை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவோராக இருப்பதுமே அதிக நெரிசலுக்கு வழிவகுக்கிறது என்பதும் பொதுமக்களது கருத்து.
போக்குவரத்து போலீஸ் நிர்வாகம்: நகரில் போக்குவரத்தைக் கவனிப்பதற்காக துணை ஆணையர், 2 உதவி ஆணையர்கள், 6 ஆய்வாளர்கள், 270 போக்குவரத்துப் போலீஸôர் இருக்கிறார்கள். இதில் போக்குவரத்து விபத்து நுண்ணறிவுப் பிரிவு, விசாரணைப் பிரிவு, போக்குவரத்து ஆய்வுப் பிரிவு எனப் பலவகைப் பிரிவுகளும் உள்ளன.
உதவி ஆணையர்கள் தலைமையில் தல்லாகுளம், நகர் என இருபிரிவுகளாகப் போக்குவரத்து நிர்வாகம் பிரிக்கப்பட்டுள்ளது. தல்லாகுளம் பிரிவில் விளக்குத்தூண், மீனாட்சியம்மன் கோயில், புதூர், அண்ணா நகர், அரசு மருத்துவமனை, செல்லூர், தல்லாகுளம், கரிமேடு, திலகர்திடல், எஸ்.எஸ். காலனி ஆகிய பகுதிகள் அடங்கும். நகரப் பகுதியில் தெப்பக்குளம், கீரைத்துறை, தெற்குவாசல், ஜெய்ஹிந்த்புரம், திடீர் நகர், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகள் அடங்குகின்றன. பயனில்லாத காமிராக்கள்: நகரில் போக்குவரத்து விதிமீறலை கண்காணிக்கப் பல இடங்களில் கண்காணிப்புக் காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், அக்காமிராக்களில் பதிவாகும் விதிமீறல் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் கூறப்படுகிறது.
ஆகவே, போக்குவரத்தை சீர்படுத்துவதற்கு சட்டரீதியில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை முறையாகச் செயல்படுத்துவது அவசியம் எனப் பெரும்பாலானோர் வலியுறுத்துகின்றனர்.
மனமிருந்தால்...மார்க்கமுண்டு!
துரையில் பெருகிவரும் வாகனங்கள், ஆக்கிரமிப்பால் குறுகிவரும் சாலைகள் என்ற நிலையே உள்ளது. புதிய பாலங்கள், தற்போதைய போக்குவரத்தில் மாற்றங்கள் ஆகியவை நெரிசலை குறைக்கும் என்றாலும், தாற்காலிகத் தீர்வும் அவசரத் தேவையாகும்.
1986-ம் ஆண்டு நிலைப்படி மாநகரப் போக்குவரத்துப் பிரிவுக்கு 2 உதவி ஆணையர், 6 ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது வாகனங்கள் பல மடங்கு பெருகிய நிலையில், இரு காவல் நிலையங்களுக்கு ஒரு ஆய்வாளர் என்ற அடிப்படையில், மேலும் 6 ஆய்வாளர் நியமிக்கப்படவேண்டியது அவசியம்.
அதேபோல, ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் ஒரு போக்குவரத்து உதவி ஆய்வாளர் நியமிக்கப்படுவதும் அவசியம். சட்டம், ஒழுங்கு, குற்றப் பிரிவுக்கு நிகராக போக்குவரத்துக்கும் அதிகாரிகள், போலீஸôர் நியமிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். தற்போது நகரில் 37 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன. இதில், 15-க்கும் மேற்பட்ட சிக்னல்களில் போக்குவரத்துப் போலீஸôர் இல்லை. குறிப்பாக நீதிமன்றம், பீபீகுளம், மாட்டுத்தாவணி, நத்தம் சாலை எஸ்.பி. பங்களா, ஆத்திகுளம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் கூட, போக்குவரத்துப் போலீஸôர் நிறுத்தப்படாத நிலை உள்ளது.
ஆகவே, ஆயுதப்படை பிரிவிலிருந்து உதவி ஆய்வாளர்கள், போலீஸôரை நகர் போக்குவரத்துப் பிரிவுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. கோரிப்பாளையம் பகுதியில், போலீஸôர் செயல்படுத்திய போக்குவரத்து மாற்றத்தால் அப்பகுதியில் நெரிசல் குறைந்துள்ளது. ஆகவே, மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளிலும் அதுபோன்ற மாற்றம் தேவை என்பதும், பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது. நகரில் பெருமளவு போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு ஆட்டோக்கள், லாரிகள் ஓட்டுநர்கள் பங்கு மிக முக்கியம். சட்டரீதியான நடவடிக்கைகள் ஒருபுறமிருந்தாலும், பொதுமக்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்படுவதும் அவசியம். வரும் புத்தாண்டிலிருந்தாவது இதைச் செயல்படுத்திட அனைவரும் மனது வைக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...