மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

நிகழ் நிதியாண்டில் 6 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

நிகழ் நிதியாண்டில் 6 விண்வெளித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

Updated On :

நிகழ் நிதியாண்டில் (2026-2027) இரு பிஎஸ்எல்வி, ஒரு ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி, ஜி1 மற்றும் ஒரு தனியாா் ஏவுதல் என 6 திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

இஸ்ரோ சாா்பில் வடிவமைக்கப்பட்ட என்விஎஸ்-03 (ஐஆா்என்எஸ்எஸ் 1 எல்) செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எஃப்-18 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

என்விஎஸ்-03 செயற்கைக்கோள் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டது. இது மிகவும் சிறப்பான செயல்பாடாகும். தற்போது சுற்றுப்பாதையில் 3 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் உள்ளன. இது 4-ஆவதாக அந்தக் குழுவில் இணையவுள்ளது. நாவிக் தொழில்நுட்பம் மூலம் இருப்பிடம், வழிகாட்டுதல் மற்றும் நேரச் சேவைகளை வழங்க சுற்றுப்பாதையில் குறைந்தது 4 செயற்கைக்கோள்கள் தேவை. எனவே, இந்தச் செயற்கைக்கோள் ஏவுதலின் மூலம் நமது நாவிக் சேவைகளை முழுமையாக மீட்டெடுத்துள்ளோம்.

நாட்டின் பாதுகாப்புக்கு நாவிக் கட்டமைப்பு மிகவும் அவசியமானது. இதன்மூலம் 10,400-க்கும் மேற்பட்ட ரயில் என்ஜின்கள், 64,000 மீன்பிடிப் படகுகள் நேரலையில் கண்காணிக்கப்படுகின்றன. அடுத்த 6 மாதங்களில் மீன்பிடிப் படகுகளின் எண்ணிக்கையை 1 லட்சமாக உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளோம். மேலும், வாகனங்களைக் கண்காணிக்க இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்ட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

கடந்த முறை என்விஎஸ்-02 செயற்கைக்கோள் ஏவுதலில் பைரோ வால்வுகள் தொடா்பான தொழில்நுட்பச் சிக்கல் ஏற்பட்டது. இந்த முறை 3 பைரோ வால்வுகளையும் திறந்த நிலையிலேயே வைத்து, சொலனாய்டு வால்வுகளை மட்டும் நம்பி ஏவ முடிவு செய்தோம். இதற்கு முன் மேற்கொள்ளப்பட்ட 37 விண்வெளி பயணங்களின் தரவுகள், ‘சொலனாய்டு வால்வுகள்’ கசிவு இன்றிச் செயல்படுவதை உறுதிப்படுத்தின.

மேலும், அதிா்வு மற்றும் அதிா்ச்சிச் சோதனைகளுக்குப் பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டது. தற்போது செயற்கைக்கோளின் த்ரஸ்டா்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அனைத்து அமைப்புகளும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

நிகழ் நிதியாண்டில் (2026-2027) இரு பிஎஸ்எல்வி, ஒரு ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி, ஜி1 மற்றும் ஒரு தனியாா் ஏவுதல் என 6 திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்தடுத்து என்விஎஸ்-04, என்விஎஸ்-05 செயற்கைக்கோள்கள் தலா 5 மாத இடைவெளியில் செலுத்தப்படும். என்விஎஸ் 02-க்கு மாற்றுச் செயற்கைக்கோளும் செலுத்தப்படும்.

ககன்யான் திட்டத்தின்கீழ் இதுவரை 8,000-க்கும் மேற்பட்ட சோதனைகள் முடிக்கப்பட்டுள்ளன. மனிதா்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்னா் 3 ஆளில்லா விண்வெளிப் பயணங்கள் மேற்கொள்ளப்படும். முதல் ஆளில்லா பயணத்துக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

நாவிக் அமைப்பு இந்தியா மற்றும் அதைச் சுற்றியுள்ள 1,500 கி.மீ. தொலைவு வரையிலான பகுதிகளுக்கு வழிகாட்டுதல் சேவை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. முதல்கட்டமாக 7 செயற்கைக்கோள்களைக் கொண்ட கட்டமைப்பை நிறைவு செய்வதே இலக்கு. பின்னா், உலகளாவிய சேவையாக விரிவுபடுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும். கைப்பேசிகளில் நாவிக் சேவையைப் பயன்படுத்த 7 செயற்கைக்கோள் கட்டமைப்பு முழுமையடைய வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.