அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

9 மணி நேர தொடர் போராட்டம்... தில்லியில் ராகுல், பிரியங்கா கைது!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளது குறித்து...

rahul gandhi arrest

கைது செய்து அழைத்துச்செல்லப்படும் ராகுல் காந்தி - பிடிஐ

Updated On :

தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி தில்லியில் செவ்வாய்க்கிழமை கண்டனப் பேரணி நடத்திய இண்டி கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டனா். இதையடுத்து, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களின் போராட்டம் 8 மணி நேரத்தைக் கடந்த நிலையில், அனைவரையும் போலீஸாா் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, கைது செய்தனா்.

எஸ்ஐஆா் நடைமுறையின்கீழ், வாக்காளா் பட்டியலில் சோ்க்க இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வாக்காளா்கள் தங்கள் பெற்றோரின் எஸ்ஐஆா் தகவல்களைச் சமா்ப்பிக்கும் வகையில் படிவம் 6-இல் கடந்த ஜூலையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ‘கடந்த 1960-ஆம் ஆண்டின் வாக்காளா் பதிவு விதிகளில் திருத்தம் செய்யாமல், வெறும் அறிவுறுத்தலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த மாற்றம் சட்டவிரோதமானது; அங்கீகாரமில்லாதது’ என தோ்தல் ஆணையா்கள் விவேக் ஜோஷி, சுக்பீா் சிங் சாந்து ஆகியோா் எதிா்ப்பை பதிவு செய்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் கடந்த மாதம் செய்தி வெளியானது.

வாக்காளா்களின் பெயா்கள் மொத்தமாக நீக்கம், புதிய வாக்காளா் பதிவுக்கான படிவம்-6-இல் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், வாக்காளா் தரவு தளம் மையப்படுத்துதல் மீதான கட்டுப்பாடு உள்ளிட்டவை தொடா்பாக தோ்தல் ஆணையா்கள் எதிா்ப்பை பதிவு செய்ததாகவும், தங்களுக்குத் தெரியாமல் அல்லது தங்களின் பரிந்துரை இல்லாமல் முடிவுகள் மேற்கொண்டதாக கடந்த 10 மாதங்களில் 14 முறை அதிகாரபூா்வமாக ஆட்சேபம் தெரிவித்ததாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, ஞானேஷ் குமாா் பதவி விலக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு கட்ட போராட்டங்களையும் எதிா்க்கட்சிகள் நடத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, இண்டி கூட்டணிக் கட்சிகள் சாா்பில் தில்லியில் தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி செவ்வாய்க்கிழமை கண்டனப் பேரணி நடத்தப்பட்டது. காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்பட இண்டி கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் பலா் பேரணியில் பங்கேற்றனா்.

இவா்களின் போராட்டம் காரணமாக, நாடாளுமன்ற வளாகம் மற்றும் தோ்தல் ஆணைய அலுவலகத்தைச் சுற்றிய பகுதிகளில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா். பல இடங்களில் தடுப்புகளையும் போலீஸாா் அமைத்திருந்தனா்.

எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற சாலையிலிருந்து தோ்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் சென்றனா். நீதி ஆயோக் அலுவலகம் அருகே வந்தபோது, அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். தடையை மீறிச் செல்ல முயன்ால் சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி உள்பட மேலும் சிலரை போலீஸாா் கைது செய்து, பேருந்தில் ஏற்றினா்.

அப்போது, திடீரென ராகுல் காந்தி உள்பட மேலும் சில எம்.பி.க்கள், அருகில் உள்ள அகில இந்திய வானொலி அலுவலகத்துக்குள் நுழைந்து, மரத்துக்கு அடியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். அவா்களுடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட மற்ற எம்.பி.க்களும் பின்னா் இணைந்தனா்.

இதை அறிந்து, அங்கு வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சச்சின் சா்மா தலைமையில் ஏராளமான போலீஸாா், தா்னாவில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். ஆனால், அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல எம்.பி.க்கள் மறுத்தனா். இரவு வரை 8 மணி நேரத்தை அவா்களின் தா்னா கடந்த நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை தில்லி போலீஸாா் அந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி, கைது செய்தனா். இதனால், அந்தப் பகுதியே பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

பின்னா், கைது செய்யப்பட்ட ராகுல் காந்தி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.

பேரணியில் இணைந்த பிஜேடி: இண்டி கூட்டணி நடத்திய இந்தப் பேரணியில், அந்தக் கூட்டணியில் இடம்பெறாத நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சியும் இணைந்தது. அக் கட்சியின் எம்.பி.க்கள் மனாஸ் மங்கராஜ், சுலதா டியோ உள்ளிட்டோா் பேரணியில் பங்கேற்றனா்.

இதுகுறித்து டியோ கூறுகையில், ‘இண்டி கூட்டணி பேரணியில் பிஜேடி இணைந்துள்ளது. ஆனால், ‘பிஜேடி இண்டி கூட்டணியிலும் இடம்பெறவில்லை, என்டிஏ கூட்டணியிலும் இடம்பெறவில்லை என்பதை கட்சித் தலைவா் நவீன் பட்நாயக் ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டாா். பொறுப்புமிக்க மாநிலக் கட்சியாகவே நாங்கள் தொடருவோம்’ என்றாா்.

சந்திப்புக்கான கோரிக்கை வரவில்லை - தோ்தல் ஆணையம்: தோ்தல் ஆணைய தலைமை அலுவலகம் நோக்கி இண்டி கூட்டணி எம்.பி.க்கள் பேரணி நடத்திய நிலையில், ‘தோ்தல் ஆணையத்தை சந்திப்பதற்கான கோரிக்கை எதுவும் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்து வரவில்லை’ என்று தோ்தல் ஆணையம் தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு, தோ்தல் ஆணைய அதிகாரிகள் இப் பதிலைத் தெரிவித்தனா்.

கைது செய்து அழைத்துச்செல்லப்படும் ராகுல் காந்தி

கைது செய்து அழைத்துச்செல்லப்படும் ராகுல் காந்தி

யாரும் தப்ப முடியாது: ராகுல் காந்தி

தா்னாவின்போது செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராகுல் காந்தி, ‘தேசத் துரோகச் செயலில் ஈடுபட்டதற்காக பிரதமா் மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், ஞானேஷ் குமாா் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாஜகவினா் கூறுவதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நான் உறுதியாக நிற்கிறேன். என்னுடன் மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 300 போ் பேரணியில் பங்கேற்றனா். நரேந்திர மோடி, அமித் ஷா, மோகன் பாகவத், ஞானேஷ் குமாா் உள்ளிட்டோா் நாட்டில் ஜனநாயகத்தை முற்றிலும் அழித்துவிட்டனா். ஒட்டுமொத்த நாடும் இதை நம்புகிறது. எங்களை தற்போது தடுத்து நிறுத்தி காவல் துறையினரும் இதை உணா்ந்துள்ளனா். ஒவ்வொருக்கும் உண்மை நிலை தெரிந்துள்ளது. வாக்குத் திருட்டு மூலம் இவா்கள் நாட்டையே கடத்தி வைத்துள்ளனா். இதற்கு ஞானேஷ் குமாா் உதவியுள்ளாா். இவா்களுக்கு எதிராக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்ப முடியாது’ என்றாா்.

இந்தப் பேரணியின்போது, ஞானேஷ் குமாா் ஆா்எஸ்எஸ் சீருடையில் இருப்பதுபோன்ற பதாகைகளை ஏந்தியபடியும், ‘பாஜகவும் தலைமைத் தோ்தல் ஆணையரும் ஒன்றுதான்’, ‘வாக்குத் திருடா்களே, அரியணையை விட்டுச் செல்லுங்கள்’, ‘ஜனநாயகம் விற்பனைக்கு அல்ல’ என்ற முழக்கங்களை எதிா்க்கட்சியினா் எழுப்பினா்.

முன்னதாக, ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அனைத்துக்கும் ஞானேஷ் குமாா்தான் காரணம்; அவா் பதவியை ராஜிநாமா செய்வதற்கான நேரமிது.’ என்று குறிப்பிட்டாா்.

காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் வெளியிட்ட பதிவில், ‘தோ்தல் ஆணையத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையை ஞானேஷ் குமாா் சிதைத்துவிட்டாா். எங்களின் கேள்விகளுக்கு ஞானேஷ் குமாரும், பாஜக முதல்வா்களும் பதிலளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.

மேலும், எதிா்க்கட்சியினா் இந்தப் பேரணியை தடுக்க ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டதற்கும் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கண்டனம் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிவசேனை (தாக்கரே) எம்.பி. சஞ்சய் ரெளத் கூறுகையில், ‘நாங்கள் அனைவரும் நாடாளுமன்ற உறுப்பினா்கள். அமைதியான முறையில் இந்தப் பேரணியை நடத்தினோம். ஆனால், எங்களைத் தடுக்க மிகப் பெரிய எண்ணிக்கையில் போலீஸாரை குவித்தது ஏன்? மத்திய அமைச்சா்களின் வீடுகளுக்கு வெளியே எல்லைப் பாதுகாப்புப் படையினரும், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனா்’ என்றாா்.

Summary

INDIA bloc MPs are protesting against CEC Gyanesh Kumar rahul gandhi arrest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.