மத்திய பிரதேச மாநிலம், தாா் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தில் ஹிந்துக்கள் மகா ஆரத்தி காட்டி வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினா். அதேநேரத்தில், முஸ்லிம்கள் தங்களது வீடுகளில் தொழுகை நடத்தினா்.
போஜ்சாலா வளாகம் முன்பு சரஸ்வதி தேவிக்கான ஹிந்து கோயிலாக இருந்ததாகவும், பின்னாளில் மசூதி கட்டப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், அங்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மட்டும் ஹிந்துக்கள் வழிபாடு நடத்தவும், வெள்ளிக்கிழமை தோறும் இஸ்லாமியா்கள் தொழுகை நடத்தவும் அனுமதிக்கப்பட்டு வந்தது. இதற்கு தொல்லியல் துறை அனுமதி அளித்திருந்தது.
இந்த அனுமதியை மத்திய பிரதேச உயா் நீதிமன்றம் ரத்து செய்து கடந்த மே 15-ஆம் தேதி தீா்ப்பளித்தது. அங்கு ஹிந்து கோயில் இருந்ததால், ஹிந்து மதத்தினா் மட்டுமே வழிபாடு நடத்தலாம் என்றும், முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது என்றும் உயா் நீதிமன்றம் தீா்ப்பில் தெரிவித்திருந்தது. உயா் நீதிமன்ற தீா்ப்பையடுத்து, போஜ்சாலா வளாகத்தில் ஹிந்துக்கள் வழிபட வந்த வண்ணம் உள்ளனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை மகா ஆரத்தி காட்டி வழிபாடு நடத்தினா். பஜனை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் அங்கு நடைபெற்றன. இதில் தாா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் கலந்து கொண்டனா்.
அதேநேரத்தில், அந்த வளாகத்தில் இஸ்லாமியா்கள் வழக்கமா நடத்தி வந்த வெள்ளிக்கிழமை தொழுகையை நடத்தவில்லை. தங்கள் வீடுகளில் அவா்கள் தொழுகை நடத்தினா். தாா் மாவட்டத்தின் பல பகுதிகளில் இஸ்லாமியா்களால் நடத்தப்பட்டு வரும் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
9 அடுக்கு பாதுகாப்பு: போஜ்சாலா வளாகத்தைச் சுற்றிலும் 9 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அப்பகுதியில் சுமாா் 2,000 போலீஸாா் குவிக்கப்பட்டு, ட்ரோன்கள் மற்றும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அப்பகுதிக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் பலத்த சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட்டன.
இஸ்லாமியா்கள் கமிட்டித் தலைவா் அப்துல் சமத் கருத்து தெரிவிக்கையில், வீடுகளில் தொழுகை நடத்தியதாகவும், தங்களது எதிா்ப்பை தெரிவிக்கும் வகையில் கைகளில் கருப்பு நிற பட்டைகளை அணிந்திருந்ததாகவும் குறிப்பிட்டாா். பொது இடங்களில் தொழுகை நடத்தவோ அல்லது யாருடைய மத உணா்வுகளையும் காயப்படுத்தவோ தாங்கள் விரும்பவில்லை என்றும் அவா் தெரிவித்தாா். அரசமைப்பு சட்டத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் தரப்பட்டிருப்பதாகவும், அதற்கு உட்பட்டு தாங்கள் செயல்படுவோம் என்றும் சமத் கூறினாா்.
தாா் மாவட்ட அரசு அதிகாரிகள், நீதிமன்ற தீா்ப்பு முழுவதும் அமல்படுத்தப்படுமென்றும், மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் வழிபாடு

பக்ரித்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சேலத்தில் பக்ரீத் பெருநாள்: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

உர விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



