பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

அஸ்ஸாம் பேரவைக்கு 7 பெண்கள் தேர்வு! ஒரே கூட்டணியில் 6 பேர்!

அஸ்ஸாம் சட்டப்பேரவைக்குத் தேர்வான பெண் எம்எல்ஏக்கள் பற்றி..

News image

அஸ்ஸாம் தேர்தலில் வெற்றி பெற்ற பெண் உறுப்பினர்கள்

Updated On :14 மணி நேரங்கள் முன்பு

அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் போட்டியிட்ட 59 பெண் வேட்பாளர்களில் ஏழு பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடந்துமுடிந்த நிலையில், அதில் பதிவான வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

புதிய சட்டப்பேரவையில் ஆளும் என்டிஏ கூட்டணியைச் சேர்ந்த ஆறு பெண் எம்எல்ஏக்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸைச் சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏவும் இடம்பெற உள்ளனர்.

மாநிலத்தின் மொத்த வாக்காளர்களான 2.50 கோடி பேரில், பெண்கள் 49.98 சதவிகிதத்தை (ஏறக்குறைய சரிபாதி) கொண்டுள்ளனர்.

பாஜக தனது பெண் எம்எல்ஏக்களின் எண்ணிக்கையை நான்காகவும், அதேநேரத்தில் அதன் கூட்டணிக் கட்சிகளான அஸ்ஸாம் கண பரிஷத் மற்றும் போடோலாந்து மக்கள் முன்னணிச் சேர்ந்த தலா ஒரு எம்எல்ஏவையும் பெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் மற்ற கட்சிகளில் இல்லாத வகையில் அதிகபட்சமாக 14 பெண் வேட்பாளர்களைக் காங்கிரஸ் களமிறக்கியது. அதில் ஒரு பெண் வேட்பாளர் மட்டும் வெற்றி பெற்றார்.

முன்னதாக, அஸ்ஸாம் சட்டப்பேரவையில், பாஜக மூன்று பெண் எம்.எல்.ஏ.க்களையும், அஸ்ஸாம் கண பரிஷத், காங்கிரஸ் கட்சிகள் தலா இரண்டு பெண் எம்.எல்.ஏ.க்களையும் கொண்டிருந்தன.

126 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் 102 இடங்களைப் பெற்று, மூன்றில் இரண்டு பங்குப் பெரும்பான்மையுடன், என்டிஏ கூட்டணி அஸ்ஸாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கத் தயாராகி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கூட்டணி அண்மைக் காலத்தில் மிக மோசமான தேர்தல் செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றது.

பாஜக போட்டியிட்ட 90 தொகுதிகளில் 82-இல் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சிகளான போடோலாந்து மக்கள் முன்னணி 11 தொகுதிகளிலும், அஸ்ஸாம் கண பரிஷத் 26 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தலா 10 இடங்களைக் கைப்பற்றின.

இத்தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களில், மாநில நிதியமைச்சர் அஜந்தா நியோக், கோலாகாட் தொகுதியில் தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றியை தக்கவைத்துக் கொண்டார்.

வெற்றி பெற்ற மற்ற பாஜக பெண் வேட்பாளர்களில் மங்கல்டோய் தொகுதியில் அக்கட்சியின் மகளிர் அணி மாநிலத் தலைவரான நீலிமா தேவி மற்றும் திபு தொகுதியில் போட்டியிட்ட நிசோ தெராங்பி ஆகியோர் ஆவர்.

பதவி விலகும் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மற்றொரு பாஜக அமைச்சரான நந்திதா கார்லோசா, தனக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் ஹஃப்லாங் தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் பாஜகவின் புதுமுகமான ரூபாலி லாங்தாசாவிடம் தோல்வியடைந்தார்.

அஸ்ஸாம் கண பரிஷத் கட்சிச் சேர்ந்த திபதிமயீ சௌத்ரி போங்கைகான் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டார். அதேவேளையில் போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் தலைவர் ஹக்ராமா மொஹிலாரியின் மனைவியான சேவ்லி மொஹிலாரி கோக்ராஜார் தொகுதியில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்ற ஒரே பெண் வேட்பாளர் துப்ரி தொகுதியில் முதன்முறைப் போட்டியாளர் பேபி பேகம் ஆவார்.

காங்கிரஸில் தோல்வியைத் தழுவியவர்கள்..

ஹஜோ-சுவால்குச்சி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ நந்திதா தாஸ், நஹர்காட்டியா தொகுதியின் முன்னாள் அமைச்சர் பிரணதி பூக்கன், கும்டாய் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ரோசலினா திர்கே, திஸ்பூர் தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவி மீரா போர்தாகுர் கோஸ்வாமி ஆகியோர் ஆவர்.

மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகின்றது. 2016ல் அதிகபட்சமாக 91 பேர் போட்டியிட்ட நிலையில் எட்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். 2021-ல் 74 பேர் போட்டியிட்டனர். 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட 86 பெண் வேட்பாளர்களில் 14 பேர் வெற்றி பெற்றனர். இதுவே இதுவரை பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும்.

2026 சட்டப்பேரவைக்குப் போட்டியிட்ட 59 பெண் வேட்பாளர்களில் ஏழு பேர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

Of the 59 women candidates who fought to enter the 126-member Assam Assembly, only seven managed to win, the same as the 2021 results.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.