அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி பூயான் சர்மா குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் வழக்கில், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று(மே 1) முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி பூயான் சர்மாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் சொத்துகள் இருப்பதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட நாடுகளின் கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) அவா் வைத்திருப்பதாகவும் பவன் கேரா குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதைத் தொடர்ந்து, ரிங்கி பூயான் சர்மா அளித்த புகாரின்பேரில், பாரதிய நியாய சம்ஹிதாவின் அவதூறு குற்றப் பிரிவுகளின்கீழ் பவன் கேரா மீது அஸ்ஸாம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
ஹைதராபாதில் வசிப்பவரான பவன் கேரா, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இடைக்கால முன்ஜாமீன் பெற்றார். ஆனால், முன்ஜாமீனுக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம், குவாஹாட்டி உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அவருக்கு அறிவுறுத்தியது.
அதன்பேரில், பவன் கேரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை, குவாஹாட்டி உயர் நீதிமன்றம் அண்மையில் நிராகரித்தது. இதனால், பவன் கேரா கைதாகக் கூடும் எனத் தகவல்கள் வெளியாகின.
இந்தச் சூழலில், குவாஹாட்டி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று (வியாழக்கிழமை) விசாரணை நடைபெற்றது.
அப்போது, பவன் கேரா தரப்பில் மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி வாதிட்டார். ‘பவன் கேராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உண்மையா அல்லது பொய்யா என்பதை தீர விசாரித்து உறுதி செய்ய வேண்டும். மாறாக, அவரைக் கைது செய்து அவமானப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அவர் மீது பதிவான குற்றச்சாட்டுகளில் சில ஜாமீன் பெறக் கூடியவைதான். மற்ற குற்றச்சாட்டுகளிலும் அவரைக் கைது செய்ய வேண்டிய தேவையில்லை’ என்றார்.
அதேநேரம், பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது என்று அஸ்ஸாம் அரசு தரப்பில் ஆஜரான சொலிசிலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டாா்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று(மே 1) விசாரணைக்கு வந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி, நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
விசாரணைக்கு ஒத்துழைக்குமாறும், அழைக்கப்பட்டால் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும், அத்துடன் சாட்சியங்களைக் கலைப்பதையும் அல்லது அவற்றின் மீதான தலையிடுதலை தவிர்க்குமாறும் பவன் கேராவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிமன்றத்தின் அனுமதி இன்றி பவன் கேரா நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றும், தேவைப்பட்டால் இந்த நிபந்தனைகளுடன் கூடுதல் நிபந்தனைகளைச் சேர்க்கும் அதிகாரத்தை விசாரணை நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியது.
அதே நேரத்தில், இந்த விசாரணையின் போது மேற்கோள் காட்டப்பட்ட ஆவணங்கள் அல்லது உண்மைகளை கணக்கில் கொள்ள வேண்டாம் என்றும் விசாரணை நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் ஏ.எஸ். சந்தூர்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு தனது உத்தரவில், ”குற்றச்சாட்டுகளும், எதிர் குற்றச்சாட்டுகளும் 'அரசியல் உள்நோக்கம் கொண்டதாகத் தெரிகிறது. இந்தச் சூழலில் விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்டவரைக் காவலில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
Summary
The Supreme Court has granted anticipatory bail to Congress leader Pawan Khera in a case alleging that he made defamatory remarks regarding Rinki Bhuyan Sarma, the wife of Assam Chief Minister Himanta Biswa Sarma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அவதூறு வழக்கில் பவன் கேராவுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன்!

பவன் கேரா முன்ஜாமீன் மனு மீதான உத்தரவை ஒத்திவைத்தது உச்சநீதின்றம்

பவன் கேரா சிங்கமல்ல... நனைந்த பூனை: பாஜக விமர்சனம்!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



