மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை வருகை தந்த குடியரசுத் தலைவரை வரவேற்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியோ, அமைச்சர்களோ வரவேற்காதது கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
அதேபோல், பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் பழங்குடியினர் நிகழ்ச்சி கடைசி நேரத்தில் மாநில அதிகாரிகளால் இடம் மாற்றப்பட்டதும் குடியரசுத் தலைவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர்-க்கு பிறகு வெளியான வாக்காளர் பட்டியலில் பல லட்சம் வாக்காளர்களின் பெயர்களை பாஜகவும், தோ்தல் ஆணையமும் திட்டமிட்டு நீக்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, முதல்வர் மமதா பானா்ஜி போராட்டத்தில் ஈடுபட்டார்.
குடியரசுத் தலைவரை வரவேற்க வராத மமதா
இந்தச் சூழ்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக குடியரசுத் தலைவர் திரெளபதி முா்மு மேற்கு வங்கத்துக்கு சனிக்கிழமை வந்தார். ஒரு மாநிலத்துக்கு குடியரசுத் தலைவா் வரும்போது, அவரை அந்த மாநில முதல்வர் அல்லது அமைச்சர்கள் நேரில் வந்து வரவேற்பது நடைமுறையாகும். ஆனால், மேற்கு வங்கத்தின் சிலிகுரி மாவட்டம், பக்தோக்ரா விமான நிலையத்துக்கு வந்த திரெளபதி முா்முவை வரவேற்க மம்தா பானர்ஜியோ, அமைச்சர்களோ வரவில்லை. சிலிகுரி மேயா் கெளதம் தேவ் மட்டுமே நேரில் வரவேற்க வந்திருந்தார்.
திடீர் இடம் மாற்றம்
அதேபோல், சிலிகுரியின் பிதன்நகரில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பழங்குடியினரைச் சந்தித்துப் பேசும் நிகழ்ச்சிக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், பாதுகாப்பு மற்றும் பிற காரணங்களுக்காக அந்த நிகழ்ச்சிக்கு கடைசி நேரத்தில் மாநில அதிகாரிகள் அனுமதி மறுத்துவிட்டனர். இதையடுத்து, அந்த நிகழ்ச்சி கோசியாபுருக்கு மாற்றப்பட்டது. கோசியாபுருக்கு குறைந்த அளவு கூட்டமே வந்திருந்தது. இதனால் திரெளபதி முர்மு அதிருப்தி அடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசியபோது, தனது அதிருப்தியை குடியரசுத் தலைவர் வெளிப்படுத்தினார்.
அதிருப்தியை வெளிப்படுத்திய குடியரசுத் தலைவர்
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், ”மமதா பானர்ஜி எனது தங்கை போன்றவர். நானும் மேற்கு வங்கத்தின் மகள்தான். அவர் (மமதா) அதிருப்தியில் உள்ளாரா எனத் தெரியவில்லை.
என்னை வரவேற்க முதல்வரோ, அமைச்சர்களோ வரவில்லை. நான் பங்கேற்கும் நிகழ்ச்சி பிதன்நகரில் முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிறகு கோசியாபுருக்கு மாற்றப்பட்டது. பிதன்நகரில் நிகழ்ச்சி நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அது மிகப்பெரிய இடம். மக்கள் அதிகம் போ் பங்கேற்றிருப்பர். அங்கு நடத்த ஏன் மாநில அரசு நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை. ஆனால், இப்போது நிகழ்ச்சி நடக்கும் இடம், மக்கள் அதிகம் கலந்து கொள்ள முடியாத இடமாகும். ஒருவேளை, பழங்குடியினர் நலனில் மாநில அரசுக்கு அக்கறையும் விருப்பமும் இல்லை என நினைக்கிறேன். அதனால்தான் என்னை வரவிடாமல் தடுத்துள்ளனர்” என்றார்.
பிரதமர் மோடி கண்டனம்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவமதித்துவிட்டது மமதா அரசு என்று பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட பதிவில், ”இது வெட்கப்பட வேண்டிய விஷயம். இதுபோல முன்பு நடந்ததில்லை. ஜனநாயகம் மீதும், பழங்குடியின சமூகத்தினருக்கு அதிகாரமளிப்பதிலும் நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொருவரும் மனமுடைந்துள்ளனர்.
பழங்குடியின சமூகத்தில் இருந்து வந்த குடியரசுத் தலைவர் தனது வலி மற்றும் வேதனையை வெளிப்படுத்தியது, நாட்டு மக்கள் அனைவரையும் மிகவும் கவலையடையச் செய்துள்ளது. மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது.
குடியரசுத் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த அவமதிப்புக்கு அரசு நிர்வாகமே பொறுப்பு. குடியரசுத் தலைவர் அலுவலகம், அரசியலுக்கு அப்பாற்பட்டது. அதன் புனிதத்துக்கு எப்போதும் மரியாதை அளிக்க வேண்டும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அரசியல் செய்கிறார் குடியரசுத் தலைவர் - மம்தா விமா்சனம்
குடியரசுத் தலைவரின் கருத்துக்குப் பதிலளித்து, முதல்வா் மமதா பானா்ஜி கூறியதாவது:
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில்கொண்டு, பாஜக சார்பில் அவர் ( திரெளபதி முர்மு) அரசியல் செய்கிறார். மேற்கு வங்க அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில், குடியரசுத் தலைவர் மாளிகையைப் பயன்படுத்தும் அளவுக்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது.
அவரை (முர்முவை) வரவேற்கச் செல்ல முடியாததற்கான காரணம் அவரிடம் அதிகாரிகள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. ஆண்டுக்கு ஒருமுறை மேற்கு வங்கத்துக்கு வந்தால் உங்களை என்னால் வரவேற்க முடியும். ஆனால், தோ்தல் நேரத்தில் வந்தால், உங்களது (முர்மு) நிகழ்ச்சிகளில் என்னால் பங்கேற்க முடியாது. மக்களின் உரிமைகள், எஸ்ஐஆர் விவகாரத்தில் நான் முழுக் கவனம் செலுத்தி வருகிறேன்.
பழங்குடியினர் குறித்து குடியரசுத் தலைவர் முர்மு பேசியுள்ளார். அப்படியெனில், மணிப்பூரிலும், பாஜக ஆளும் மற்ற மாநிலங்களிலும் பழங்குடியினர் சித்திரவதை செய்யப்பட்டபோது ஏன் நீங்கள் மெளனமாக இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார் மமதா.
பிரதமருக்கு மமதா பதில்
பிரதமர் நரேந்திர மோடியின் விமர்சனத்துக்குப் பதிலளித்துப் பேசிய மமதா பானர்ஜி அரசியலமைப்பு எங்களுக்குத் தாய்ப் போன்றது. நாங்கள் அதை அவமதிக்கமாட்டோம். எங்கள் மீது எழும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தேர்தல் நோக்கங்களுக்கானவை.” எனத் தெரிவித்தார்.
Summary
West Bengal Chief Minister Mamata Banerjee and her ministers have come under heavy criticism for not welcoming the President, who arrived in the state on Saturday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவின் வீழ்ச்சி தொடங்கிவிட்டது: மமதா!
மேற்கு வங்கத்தில் சூப்பர் குடியரசுத் தலைவர் ஆட்சி: மமதா பானர்ஜி
மணிப்பூரில் பழங்குடியினர் பாதிக்கப்பட்டபோது அமைதி காத்த குடியரசுத் தலைவர் எங்களைக் குறிவைப்பது ஏன்? - மம்தா
அரசியலுக்கு அப்பாற்பட்டது குடியரசுத் தலைவர் பதவி: பிரதமர் மோடி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



