2026-27 ஆம் ஆண்டிற்கான சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் துணைத் தலைவராக இந்தியாவின் மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் மத்திய கலாசார அமைச்சகத்தின் செயலாளருமான விவேக் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு முக்கியமான வெற்றி என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 17 முதல் 19 வரை நடைபெற்ற நிதி நடவடிக்கை பணிக்குழு கூட்டத்தின்போது, பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவு ஆயுதப் பரவலுக்கு நிதியளித்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகள் குறித்து உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர். போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா மற்றும் ஈராக் ஆகியவை கூடுதல் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன; அதேவேளையில், அல்ஜீரியா மற்றும் நமீபியா ஆகிய நாடுகள் தங்கள் செயல் திட்டங்களை நிறைவு செய்ததைத் தொடர்ந்து நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தீவிர கண்காணிப்பு (சாம்பல்) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.
மேலும், இந்த கூட்டத்தில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தலைவராக கைல்ஸ் தாம்சனும், துணைத் தலைவராக விவேக் அகர்வாலும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டனர்.
மெக்ஸிகோவைச் சேர்ந்த எலிசா டி ஆண்டா மத்ராசோவுக்குப் பதிலாக கைல்ஸ் தாம்சன் தலைவராகவும், கைல்ஸ் தாம்சனுக்கு பதிலாக விவேக் அகர்வால் துணைத் தலைவராகவும் பொறுப்பேற்கின்றனர்.
இரண்டு ஆண்டுகள் கொண்ட இந்த பதவி காலங்களில் அமைப்பின் பணிகளைச் செயல்படுத்துவதில் தலைவருக்குத் துணைத் தலைவர் உதவுகிறார்.
இதுவே முதல் முறை
பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் தலைமைத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் ஒரு முக்கிய நிகழ்வாக, இந்திய ஆட்சிப் பணியின் (1994 ஐஏஎஸ் - மத்தியப் பிரதேச பிரிவு) அதிகாரியும், தற்போது மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் செயலாளருமான விவேக் அகர்வால், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பொறுப்புக்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இது இந்தியாவுக்கு கிடைத்த ஒரு முக்கியமான வெற்றி என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம்பிக்கையை பிரதிபலிக்கிறது
200-க்கும் மேற்பட்ட அதிகார வரம்புகளைக் கொண்ட சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் துணைத் தலைவர் பதவிக்கு இந்தியா உயர்ந்திருப்பது, உலகளாவிய கட்டமைப்பில் இந்தியா பெற்றுள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இதில் இந்தியாவின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துவதை நோக்கி அகர்வால் பணியாற்றுவார்.
முன்னதாக நிதியமைச்சகத்தில் கூடுதல் செயலாளராகவும், நிதி நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றியுள்ள அகர்வால், சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கான இந்திய குழுவிற்குத் தலைமை தாங்கியதுடன், பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலைத் தடுக்கும் இந்த சர்வதேச கண்காணிப்பு அமைப்பின் செயல்பாடுகளில் முக்கிய பங்காற்றியுள்ளார்.
இது தொடர்பாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
அகர்வாலின் இந்தத் தேர்வு இந்தியாவுக்குக் கிடைத்த ஒரு முக்கிய வெற்றி. இது நியமனமானது. உலகளாவிய பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பு வலைப்பின்னல்களை எதிர்த்துப் போராடுவதிலும், சட்டவிரோத நிதி அமைப்புகளை முறியடிப்பதிலும் இந்தியாவின் இடைவிடாத கவனத்தை உறுதிப்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.
நிதியமைச்சகத்தில் கூடுதல் செயலாளர், நிதி நுண்ணறிவுப் பிரிவின் இயக்குநர் மற்றும் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவுக்கான இந்திய குழுவின் முன்னாள் தலைவர் ஆகிய பதவிகளில் அகர்வால் பெற்ற அனுபவம், நிதிசார் நேர்மையைப் பாதுகாக்கும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பெருமையாகக் கருதுகிறேன்
தனது நியமனம் குறித்து அகர்வால் கூறியதாவது: "இந்த நியமனம் இந்தியாவின் கூட்டு முயற்சியையும், பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு தடுப்புக்கான நமது கட்டமைப்பின் வலிமையையும் அங்கீகரிப்பதாகும். இதில் பணியாற்றுவதை நான் பெருமையாகக் கருதுகிறேன்; சர்வதேச நிதி அமைப்பைப் பாதுகாப்பானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும், உறுதியானதாகவும் வைத்திருக்க சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழுவின் உலகளாவிய கட்டமைப்போடு இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன்."
வருவாய்த் துறை செயலாளர் அரவிந்த் ஸ்ரீவத்சவா, இது ஒரு பெருமைக்குரிய மைல்கல் என்று குறிப்பிட்டதுடன், சர்வதேச நிதி அமைப்பின் நேர்மையை வலுப்படுத்துவதில் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.
பாரிஸை தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு என்பது பணமோசடி, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பேரழிவு ஆயுதப் பரவலுக்கு நிதியளித்தல் ஆகியவற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய தரநிலைகளை நிர்ணயிக்கும் அமைப்பாகும். இந்தியா 2010 முதல் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் உறுப்பினராக இருந்து வருகிறது.
Summary
India’s senior bureaucrat Vivek Aggarwal has been selected as the next Vice-President of the Financial Action Task Force (FATF) for the 2026-27 term
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











