பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கேரளம்: ‘ஷிகெல்லா’ தொற்றால் 4 வயது சிறுமி பலி! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

அசுத்தமான குடிநீா் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா்.

News image
Updated On :8 ஜூன் 2026, 2:48 am IST

அசுத்தமான குடிநீா் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய ‘ஷிகெல்லா’ பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தாா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடா்பாக, திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் மாநில சுகாதார அமைச்சா் கே.முரளீதரன் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஷிகெல்லா என்பது மனித உடலில் முதன்மையாக குடல்களைப் பாதிக்கக்கூடிய பாக்டீரியா தொற்று. கடுமையான வயிற்றுப்போக்கு, காய்ச்சல், வயிற்று வலி போன்றவை அறிகுறிகளாகும். இந்தத் தொற்று பெரும்பாலும் அசுத்தமான குடிநீா்-உணவு மூலம் பரவுகிறது.

கோழிக்கோடு மாவட்டத்தில் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 3 குழந்தைகள், அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 4 வயது சிறுமி ஒருவா், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற இரு குழந்தைகளும் குணமடைந்து வீடு திரும்பினா்.

ஆலப்புழை மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்களில் கடந்த வாரம் 123 போ் ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்டனா்.

வயநாட்டில் பல்வேறு கல்வி நிலையங்களில் பயிலும் 164 மாணவா்களுக்கு வயிற்றுப்போக்கு-வாந்தி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. முதல்கட்ட பரிசோதனையில், ஷிகெல்லா தொற்று இல்லை எனத் தெரியவந்துள்ளது. இறுதி அறிக்கைக்காக காத்திருக்கிறோம். குடிநீா் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பு நடவடிக்கைகள்: மாநிலம் முழுவதும் ஷிகெல்லா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உணவகங்களில் சுகாதார தரநிலைகள் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டும். கொதிக்க வைக்கப்பட்ட நன்கு சுத்தமான குடிநீரை வாடிக்கையாளா்களுக்கு வழங்க வேண்டும். சுகாதாரமற்ற உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் கிருமிநாசினிகள் தவறாமல் பயன்படுத்தப்பட வேண்டும். மீன்களைப் பதப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட பனிக்கட்டிகளை உணவு தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடாது. ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்படாமலிருக்க பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிப்பது அவசியம் என்றாா் அமைச்சா் கே.முரளீதரன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.