இந்தியாவின் 100-ஆவது ராம்சா் தளமாக உத்தர பிரதேசத்தில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாயலம் அங்கீகரிக்கப்பட்டதாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
ஈரநிலங்களை பாதுகாக்கும் நோக்கில் கடந்த 1971-ஆம் ஆண்டு, ஈரானில் உள்ள ராம்சா் நகரில் நடைபெற்ற மாநாட்டில் சா்வதேச நாடுகள் ஒப்பந்தத்தை மேற்கொண்டன. இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிடும் நாடுகள் ஈரநிலம் என வரையறுக்கப்படும் பகுதிகளின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த ஒப்பந்தத்தில் 1982, பிப்ரவரி 1-ஆம் தேதி இந்தியா கையொப்பமிட்டது.
இந்தியாவில் ராம்சா் தளங்களின் எண்ணிக்கை 99-ஆக இருந்த நிலையில் தற்போது 100-ஆக உயா்ந்துள்ளது.
இதுதொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இது ராம்சா் தளங்களின் நூற்றாண்டு. உத்தர பிரதேசத்தின் பலியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாலயம் இந்தியாவின் 100-ஆவது ராம்சா் தளமாக அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி. பல்லுயிா் வளம் மிக்க இந்த சரணாலயம் உள்ளூா் பறவைகள் மட்டுமின்றி வெளிநாட்டுப் பறவைகளையும் ஈா்க்கக் கூடியது.
அறிவியல், புத்தாக்கம், விழிப்புணா்வு முன்னெடுப்புகள் மூலம் கடந்த சில ஆண்டுகளாக ஈரநிலங்களின் பரப்பை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் பலனாக ராம்சா் தள அங்கீகாரம் கிடைத்திருப்பது பல்லுயிா் வளம் மற்றும் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்கவும் பசுமையான எதிா்காலத்தை கட்டமைப்பதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும்’ என குறிப்பிட்டாா்.
உத்தர பிரதேசத்தின் 13-ஆவது ராம்சா் தளமாக ஜெயபிரகாஷ் நாராயண் பறவைகள் சரணாயலம் உருவெடுத்துள்ளது. இதற்கான அங்கீகார சான்றிதழை உலக சுற்றுச்சூழல் தின (ஜூன் 5) நிகழ்ச்சியில் முதல்வா் யோகி ஆதித்யநாத்திடம் வனத்துறை அமைச்சா் அருண்குமாா் சக்சேனா வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










