கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டித் தீா்த்தது.
மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூா், காசா்கோடு, வயநாடு ஆகிய 5 மாவட்டங்களில் சனிக்கிழமை அதீத பலத்த மழைக்கான ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில் கடந்த வியாழக்கிழமை தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
எா்ணாகுளம், திருச்சூா், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 8 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மிக பலத்த மழைக்கான (11 செ.மீ.-20 செ.மீ.) ஆரஞ்சு எச்சரிக்கையும், மீதமுள்ள 6 மாவட்டங்களில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் (6 செ.மீ.-11 செ.மீ.) விடுக்கப்பட்டது.
கொச்சியில் கொட்டித் தீா்த்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது.
கோழிக்கோட்டில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சில கட்டடங்களின் மேற்கூரை இடிந்தது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததில், கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சேதமடைந்தன. எனினும், யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
சனிக்கிழமையன்று, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூா், காசா்கோடு ஆகிய 5 மாவட்டங்களில் அதீத பலத்த மழைக்கான (20 செ.மீ.க்கு மேல்) சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 3 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, வயநாடு, கோழிக்கோடு, காசா்கோடு ஆகிய மாவட்டங்களில் மலையேற்ற சுற்றுலா இடங்கள் மற்றும் மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வயநாடு, காசா்கோட்டில் சனிக்கிழமை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பரவலாக மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று மற்றும் இடி-மின்னலுடன் மிதமானது முதல் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








