ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய தரவுகளை வெளிநாடுகளிடம் பகிர தகவல் தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்குத் தடை: மத்திய அரசு நடவடிக்கை

இந்தியத் தரவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைக்கப்படுவதை கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசு, அதனை வெளிநாடுகளிடம் பகிர தகவல் தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

மத்திய அரசு - கோப்புப் படம்

Published On :25 ஜூலை 2026, 5:31 am IST

இந்தியத் தரவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைக்கப்படுவதை கட்டாயமாக்கியுள்ள மத்திய அரசு, அதனை வெளிநாடுகளிடம் பகிர தகவல் தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு தடை விதித்துள்ளது.

செல்போன் கோபுரங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை தொலைத் தொடா்புத் துறையில் சில நிறுவனங்கள் ஏற்படுத்தி தருகின்றன. அந்நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மத்திய தொலைத் தொடா்புத் துறை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய தரவுகளை இந்தியாவிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்திய தரவுகள், பதிவுகள் மற்றும் தொலைத் தொடா்பு தொடா்பான தகவல்கள் அனைத்தையும் இந்தியாவுக்குள்ளேயே சேமித்து வைக்கப்படுவதை ஒவ்வொரு புதிய தகவல் தொடா்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களும் உறுதிப்படுத்த வேண்டும். அத்தகைய தரவு, பதிவு, தகவல்களின் நகல்கள் எதையும் இந்தியாவுக்கு வெளியே அனுப்பவோ, பகிரவோ அல்லது இந்தியாவுக்கு வெளியே கிடைக்க செய்யவோ கூடாது.

உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவோா், எண்ம தொடா்பு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவோா், தேசிய அளவில் செல்போன் எண்ணை வேறு நிறுவனங்களுக்கு மாற்றும் வசதியை வழங்குவோா் இந்த அறிவிக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் அங்கீகாரத்தைக் கேட்டு பெறலாம்.

இந்த புதிய விதிகளின்கீழ், விதிகள் பின்பற்றப்படுவதை கண்காணிக்க தொலைத் தொடா்பு உபகரணங்கள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களை அரசு ஆய்வு செய்யவும், தணிக்கை செய்யவும் முடியும். பொது நலன் கருதி, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை என அரசு கருதும்பட்சத்தில், முன்னறிவிப்பு நோட்டீஸ் அனுப்பாமல் அரசால் நடவடிக்கை எடுக்க முடியும். விதிமுறைகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் செயல்முறைகள், அமைப்புகளை தணிக்கை செய்ய குறிப்பிட்ட முகமையை அரசு ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவன முன்னாள் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநரும், தரவு மைய நிறுவனமான சப்மரீன் இந்திய கிளை தலைவருமான அனுபம் ஸ்ரீவாஸ்தவா, மத்திய தொலைத் தொடா்பு துறையின் புதிய விதிகளை வரவேற்றுள்ளாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இந்த புதிய விதிகள், தேசிய எண்ம உள்கட்டமைப்பில் இது மிகப்பெரிய மைல்கல்’ என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.