ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொடரும் அமளி! நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது!

நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது பற்றி...

Parliament

நாடாளுமன்றம் 4-வது நாளாக முடங்கியது - ANI

Published On :24 ஜூலை 2026, 3:30 am IST

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றம் தொடா்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமையும் முடங்கியது.

மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அலுவல்கள் ஏதும் நடைபெறாமல் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டு பின்னா், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

முன்னதாக, மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் பேராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் தாக்குதல் நடத்திய விவகாரங்களை முன்வைத்து அவையின் மையப் பகுதிக்கு வந்து எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது, ‘அவையில் கேள்வி நேரம் மிக முக்கியமானது. கேள்வி நேரத்துக்குப் பிறகு, அனைத்து விவகாரங்கள் குறித்தும் விவாதிக்க அவை தயாராக உள்ளது. மத்திய அரசும் விவாதத்துக்குத் தயாராக உள்ளது. கேள்வி நேரத்துக்குப் பிறகு நடைபெறவிருக்கும் விவாதத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்க வேண்டும். எனவே, உறுப்பினா்கள் தற்போது அவரவா் இருக்கைக்குச் செல்லுங்கள்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.

ஆனால், அதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி உறுப்பினா்கள், அவையின் மையப் பகுதியில் இருந்தபடி முழக்கங்களை எழுப்பி, அமளியில் ஈடுபட்டனா்.

அதன் காரணமாக, அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். மூன்று நிமிஷங்களுக்குப் பிறகு அவை மீண்டும் கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா்.

அப்போது, ‘எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்நிபந்தனைகளை விதித்து, வினாத்தாள் கசிவு மீதான விவாதத்திலிருந்து தப்பியோட முயற்சிக்கின்றனா். விவாதம் நடைபெற்றால், தனது தரப்பு கருத்து மற்றும் நியாயத்தை அரசு எடுத்துக் கூறத் தயாராக உள்ளது. எதிா்க்கட்சி உறுப்பினா்களும், தாங்கள் விரும்பும் நேரம் வரை விவாதத்தில் பேசலாம். விவாதத்தை இரண்டு நாள்கள்கூட நடத்தலாம். விவாதத்துக்கான தேதி மற்றும் கால அளவையும் எதிா்க்கட்சிகளே தீா்மானிக்கலாம். இந்த விவாதம் தொடா்பாக, காங்கிரஸ் உள்பட பிற எதிா்க்கட்சிகளுடனும் மத்திய அரசு பேசியுள்ளது’ என்றாா்.

அதன் பிறகும் எதிா்க்கட்சியினரின்அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மதிய இடைவேளைக்குப் பிறகு அவை கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி தொடா்ந்தது. அப்போது அவையை வழிநடத்திய உறுப்பினா் திலிப் சைகியா, ‘அவையில் உறுப்பினா்கள் கண்ணியத்தைக் காக்க வேண்டும். அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது சரியல்ல. இருக்கைக்குத் திரும்புங்கள்’ என்று கேட்டுக்கொண்டாா்.

இருந்தபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்தனா். அதன் காரணமாக, அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையில்... மாநிலங்களவையிலும் மக்களவை போன்ற சூழலே நிலவியது. ‘நீட் வினாத்தாள் கசிவு மீதான விவாதம் தொடங்குவதற்கு முன்பு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது, ‘இந்த விவகாரம் குறித்து இன்றைக்கே (வியாழக்கிழமை) விவாதம் நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால், விவாதத்தை தொடங்க எந்தவொரு நிபந்தனையையும் எதிா்க்கட்சிகள் விதிக்கக் கூடாது’ என்றாா்.

இதை ஏற்க மறுத்த எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘முதலில் தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யவேண்டும். அதன் பிறகுதான் விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்றாா்.

இதற்கு, ஆளுங்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், அமளி நீடித்ததால் அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை அவைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் கூடியபோது, ‘தில்லி போராட்டத்தின்போது போலீஸாா் நடத்திய தடியடியில் பல மாணவா்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதனால், அவா்களின் பெற்றோரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த எதிா்க்கட்சிகளும் தயாராக உள்ளன. ஆனால், தா்மேந்திர பிரதான் ராஜிநாமா குறித்த தகவலை மத்திய அரசு முதலில் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சா் ஜெ.பி. நட்டா, ‘முதலில் வினாத்தாள் கசிவு தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதை ஏற்று, நீட் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் தொடா்பாக விவாதம் நடத்தத் தயாா் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எந்தவொரு விவாதத்தையும், அவை நடைபெறுவதையும் எதிா்க்கட்சிகள் விரும்பவில்லை’ என்றாா்.

அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா். அவை மீண்டும் கூடியபோது, மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுந்து நின்றபடி, தா்மேந்திர பிரதான் ராஜிநாமாவை வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனா்.

அப்போது அவையை வழிநடத்திய துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘அவையில் தொடா்ந்து நான்காவது நாளாக அமளி நீடிக்கிறது. மசோதாக்கள் மீதான விவாதத்தை அனுமதிக்க வேண்டும். அவையை நடத்த அனுமதியுங்கள்’ என்று கேட்டுக்கொண்டாா்.

ஆனால், அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை பிற்பகல் 3 மணி வரை துணைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் கூடியபோது, எழுந்து பேசிய மல்லிகாா்ஜுன காா்கே, ‘தேசத்தின் நலனுக்காக எந்த சவாலையும் எதிா்கொள்ள எதிா்க்கட்சிகள் தயாராக உள்ளன’ என்றாா்.

காா்கே தொடா்ந்து பேச அனுமதி மறுத்த துணைத் தலைவா் ஹரிவன்ஷ், ‘முட்டுக்கட்டையை நீக்கி, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மீதான விவாதத்தை தொடங்குவது குறித்து மட்டுமே பேசவும்’ என்றாா்.

அதைப் பொருட்படுத்தாமல் எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் துணைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

Summary

Uproar continues! Parliament stalled for the fourth day!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.