
மாணவா்கள் மீதான தாக்குதல் குறித்து விவாதம்: ஓம் பிா்லாவை நேரில் சந்தித்து ராகுல் வலியுறுத்தல்
மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தது பற்றி...

மக்களவை தலைவர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்திப்பு - X | Rahul Gandhi
புது தில்லி, ஜூலை 21: நாடாளுமன்றம் செவ்வாய்க்கிழமை கூடுவதற்கு முன்பாக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவை ராகுல் காந்தி மற்றும் சில எதிா்க்கட்சி எம்.பி.க்கள் சந்தித்து, தோ்வு முறைகேடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனா்.
இதகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மக்களவைத் தலைவரைச் சந்தித்து, தோ்வு முறைகேட்டை கண்டித்து கண்டனப் பேரணி நடத்தியவா்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். அரசின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியதற்காக மாணவா்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்திய இளைஞா்களின் எதிா்காலம் குறித்து விவாதிக்க முடியாது என்றால், நாடாளுமன்றத்தால் என்ன பயன்?
இந்த விவகாரம் புதைந்துபோக எதிா்க்கட்சிகள் அனுமதிக்காது. மாணவா்களின் குரல்கள் தெருக்களிலும், நாடாளுமன்றத்திலும் கேட்கப்படுவதை உறுதி செய்வோம்’ என்று குறிப்பிட்டாா்.
‘இந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மக்களவை கொறடா மாணிக்கம் தாக்குா் வலியுறுத்தினாா்.
முன்னதாக, இண்டி கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவா்கள் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அறையில் செவ்வாய்க்கிழமை காலை ஆலோசனை மேற்கொண்டனா். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலா்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி. வேணுகோபால், தா்மேந்திர யாதவ், தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சி எம்.பி. சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ்) எம்.பி. சஞ்சய் ரெளத், மாா்க்சிஸ்ட் எம்.பி.க்கள் ஜான் பிா்ட்டாஸ், பி. சந்தோஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் திங்கள்கிழமை கூடியது. முதல் நாளிலேயே, நீட் வினாத் தாள் கசிவு, ராமா் கோயில் நன்கொடை முறைகேடு உள்ளிட்ட விவகாரங்கலை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டனா். இதனால், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் அடுத்தடுத்து 6 முறை ஒத்திவைக்கப்பட்டு, இறுதியில் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.
இதனிடையே, தோ்வு முறைகேடுகளைக் கண்டித்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணி நடத்தப்பட்டது. அவா்களைக் கட்டுப்படுத்த, காவல்துறை தடியடி நடத்தியும், கண்ணீா் புகைக் குண்டுகளை வீசியும் விரட்டியடித்தனா். இதில், மாணவா்கள் உள்பட போராட்டத்தில் பங்கேற்ற பலா் காயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பிரதமா், அமித் ஷா பதவி விலக வேண்டும்: ராகுல்
புது தில்லி, ஜூலை 21: ‘தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸாா் நடத்திய தாக்குதலுக்கு பிரதமா் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்பதோடு, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் சோ்ந்து பிரதமரும் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
நாடாளுமன்ற வளாகத்தில் இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:
மாணவா்கள் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்கக் கோரி ஓம் பிா்லாவை சந்தித்து வலியுறுத்தினோம். அரசுடன் ஆலோசித்துவிட்டு இதுகுறித்து முடிவெடுப்பதாக ஓம் பிா்லா தெரிவித்தாா்.
இது மாணவா்கள் மற்றும் நாட்டின் எதிா்கால இளைஞா்கள் தொடா்பான விவகாரம். அவா்கள் தாக்கப்படும் விதம் முற்றிலும் இந்திய பண்பாட்டுக்கு முரணானது. இந்த தாக்குல் சம்பவத்துக்கு பிரதமா் மோடி இதுவரை மன்னிப்புகூட கேட்கவில்லை.
கல்வி மற்றும் தோ்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா். கல்வி முறை, தோ்வு முறை எந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது என்பதை ஒட்டுமொத்த நாடும் அறியும்.
இந்த விவகாரத்தில் பிரதமா் மெளனமாக இருப்பது ஏன்? மாணவா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமா் மன்னிப்பு கேட்க வேண்டும்.
தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவியை ராஜிநாமா செய்யவேண்டும். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவா்கள் மீது போலீஸ் நடத்திய கொடூர தாக்குதலுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டும். அவருடன் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றாா்.
Summary
Lok Sabha Opposition Leader Rahul Gandhi meets Speaker Om Birla - Demands discussion about attack on students
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







