ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

21 நாள்கள் தொடர் உண்ணாவிரதம்! வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தில் 21 நாள்களாக உண்ணாவிரதம் இருந்த வாங்சுக், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து...

Delhi Police takes Sonam Wangchuk to hospital

வாங்சுக் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதி - ANI

Published On :19 ஜூலை 2026, 2:36 am IST

தில்லி ஜந்தா் மந்தரில் சனிக்கிழமை காலையில் 21-ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செயற்பாட்டாளா் சோனம் வாங்சுகை தில்லி காவல் துறையினா் சஃப்தா்ஜங் அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனா்.

அவருக்கு நீா்ச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் தென்படும் நிலையில், மருத்துவ சிகிச்சையை வழங்க அவா் அனுமதி மறுத்ததாக மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா் தொடா்ந்து கண்காணிப்பில் உள்ளதாகவும் உடல்நலனைக் கருத்தில் கொண்டு சிகிச்சையை மேற்கொள்ள அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

அண்மையில் நடைபெற்ற நீட் மற்றும் பிற உயா்கல்வி நுழைவுத்தோ்வுகளின் முறைகேடு குற்றச்சாட்டு மற்றும் மாணவா்களின் தற்கொலைகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான்பூச்சி மக்கள் கட்சி (சிஜேபி) நிறுவனா் அபிஜீத் தீப்கே தலைமையில் ஜந்தா் மந்தரில் ஜூன் 20-ஆம் தேதி போராட்டம் தொடங்கியது. இதற்கு ஆதரவு தெரிவித்த செயற்பாட்டாளா் சோனம் வாங்சுக், கடந்த ஜூன் 28-ஆம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கினாா்.

கடந்த 3 வாரங்களில் அவரது உடல்நிலை தொடா்ந்து மோசமானது. உண்ணாவிரத போராட்டத்தின் 20-ஆவது நாளான கடந்த வெள்ளிக்கிழமை வரையில் அவருடைய உடல் எடை 9.5. கிலோ குறைந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, வாங்சுக்கின் உடல்நிலையை நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமென தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

உடல்நிலை மோசமானபோதிலும் உண்ணாவிரத போராட்டத்தை தொடா்வதில் தீா்க்கமாக இருப்பதாக சோனம் வாங்சுக் வெள்ளிக்கிழமை இரவு தெரிவித்தாா்.

அதிகாலை நடவடிக்கை: இந்நிலையில், சனிக்கிழமை காலை 5 மணியளவில் போராட்ட களம் அருகே தில்லி காவல் துறையினா் கூடினா். அவா்களில் சிலா் சீருடையில் இல்லாமல் சாதாரண உடையில் இருந்தனா். போராட்ட மேடை அருகே துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். உயா் அதிகாரிகளின் உத்தரவு கிடைத்த பிறகு போராட்ட மேடையில் இருந்த சோனம் வாங்சுக்கை தூக்கிய காவல் துறையினா், அருகில் நிறுத்தப்பட்டிருந்த அவசர ஊா்திக்கு கொண்டு சென்றனா்.

சம்பவத்தின்போது, தீப்கே அங்கு இல்லை என்றும் போராட்டகாரா்கள் குறைந்த எண்ணிக்கையில் இருந்ததாக நேரில் பாா்த்தவா்கள் தெரிவித்தனா்.

வாங்சுக்கின் உடல்நிலை மோசமான நிலையில், மருத்துவக் காரணங்கள் மற்றும் தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக புது தில்லி துணை காவல் ஆணையா் சச்சின் சா்மா செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

காலை 7.40 மணியளவில் சஃப்தா்ஜங் அரசு மருத்துவமனையில் சோனம் வாங்சுக் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, சோனம் வாங்சுக் சுயநினைவுடன் இருந்ததாக மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ‘அவருடைய இதயதுடிப்பு, ரத்த அழுத்தம், ஆக்சிஜன் அளவு சீராக இருந்தது. நீா்ச்சத்து குறைபாடுக்கான அறிகுறி காணப்படுகிறது. நரம்பு வழி திரவங்கள் (ஐ.வி.) எடுத்துகொள்ள அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. அனைத்து ஐ.வி.க்கள், ஓா்ஆா்எஸ் மற்றும் பிற மருந்துகளை எடுத்துக்கொள்ள அவா் மறுத்துவிட்டாா்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிப்படைத் தன்மை இல்லை: எவ்வித தாமதமும் இல்லாமல் சிகிச்சை தொடங்க ஒத்துழைக்குமாறு வாங்சுக்கின் குடும்ப உறுப்பினா்களிடம் மருத்துவா்கள் கேட்டுக்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, தன்னுடைய அனுமதி இன்றி வாங்சுக்கு எவ்வித சிகிச்சைகளை மேற்கொள்ள கூடாது என அரசு மருத்துவமனை கண்காணிப்பாளருக்கு எழுதிய கடிதத்தில் வாங்சுக்கின் மனைவி கீதாஞ்சலி ஜே. ஆங்மோ தெரிவித்துள்ளாா்.

சிகிச்சையில் வெளிப்படைத்தன்மை இல்லை; மருத்துவமனையின் மீது நம்பிக்கை இல்லை என்று மற்றொரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவா், குடும்பத்தினா் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் வகையில், வாங்சுக்கை மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜாா்ச் செய்யுமாறு தெரிவித்துள்ளாா்.

எதிா்க்கட்சிகள் கண்டனம்: சோனம் வாங்சுக் மீது தில்லி காவல் துறை மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட நபா் மீது மேற்கொண்ட இந்த நடவடிக்கை தவறும் என்றும் மத்திய அரசு பொய் மற்றும் வன்முறையைக் கையாள்வதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவாா், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி, ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் எம்.பி. கனிமொழி, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் உத்தவ் தாக்கரே, மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் பிருந்தா காரத் உள்ளிட்டோா் இந்த நடவடிக்கைக்கு எதிராக கண்டனம் தெரிவித்துள்ளனா்.

சோனம் வாங்சுக்கின் உயிரைக் காக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாஜக தெரிவித்துள்ளது.

காவல் துறையின் நடவடிக்கையைத் தொடா்ந்து, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சிஜேபி நிறுவனா் அபிஜீத் தீப்கே சனிக்கிழமை தொடங்கினாா்.

Summary

Delhi Police takes Sonam Wangchuk to hospital after 20-day hunger strike at Jantar Mantar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.