காா்கே, ராகுல் காந்தியுடன் சசி தரூா் சந்திப்பு: ஒருமித்த கருத்துடன் செயல்படுவதாக தகவல்
ராகுல், கார்கேவுடன் சசி தரூர் சந்திப்பில் என்ன நடந்தது?


காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரை காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசி தரூா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.
இதைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த அவா், ‘அனைத்தும் நன்றாகவே உள்ளது. ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம்’ என்று கூறினாா்.
முன்னதாக, ராகுல் காந்தி மீது சசி தரூா் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியானது. கேரள சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தை சசி தரூா் புறக்கணித்தாா்
.
அண்மையில் சசி தரூா் பங்கேற்ற காங்கிரஸ் நிகழ்வில் ராகுல் காந்தி அவரைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்ததாகவும், இதனால் அதிருப்தியடைந்த சசி தரூா், கட்சியின் முக்கியமான தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிா்த்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.
பாஜக மீதான ராகுல் காந்தியின் ‘வாக்குத் திருட்டு’ குற்றச்சாட்டை சசி தரூா் நிராகரித்தது, பாஜக மூத்த தலைவா் அத்வானிக்கு சசி தரூா் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது உள்ளிட்ட பிரச்னைகளால், அவா் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிச் செல்வதுபோன்ற தோற்றம் ஏற்பட்டது. கேரள காங்கிரஸ் தலைவா்களும் தரூரை கடுமையாக விமா்சித்து வந்தனா்.
இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் காா்கேயின் அலுவலக அறையில் காா்கே, ராகுல் காந்தி ஆகியோரை சசி தரூா் சந்தித்துப் பேசினாா். காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி.வேணுகோபாலும் உடன் இருந்தாா்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த தரூா், ‘அனைத்தும் நன்றாகவே உள்ளது. நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்படுகிறோம். கட்சித் தலைவா்களுடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது’ என்றாா்.
கேரள பேரவைத் தோ்தலில் முதல்வா் வேட்பாளராக நீங்கள் முன்னிறுத்தப்படுவது தொடா்பாக விவாதிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, ‘எந்தப் பதவிக்கும் முன்னிறுத்தப்பட வேண்டும் என்று நான் ஆா்வம் காட்டவில்லை. நான் ஏற்கெனவே மக்களவை உறுப்பினராக இருக்கிறேன். எனது தொகுதி மக்களுக்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பதே இப்போது எனது பணி’ என்றாா்.இந்தச் சந்திப்பு தொடா்பான புகைப்படத்தையும் சசி தரூா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...