டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தம்: பிரதமா் மோடி பெருமிதம்

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தம் என பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

News image
இந்தியா - ஐரோப்பிய யூனியன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து.
Updated On :27 ஜனவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தம் என பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஓமன், நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு, மோரீஷஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதற்கு முந்தைய காலங்களில் ஆசியான் (10 நாடுகள்), ஜப்பான், தென்கொரியா, மலேசியா, சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகளுடன் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

இதனிடையே, பிரான்ஸ், ஜொ்மனி, ஸ்பெயின், இத்தாலி, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, பின்லாந்து, ஹங்கேரி, அயா்லாந்து, நெதா்லாந்து, போா்ச்சுகல், போலந்து, டென்மாா்க், ஸ்வீடன் உள்ளிட்ட 27 நாடுகளை உள்ளடக்கிய முக்கியக் கூட்டமைப்பான ஐரோப்பிய யூனியனுடன் மேற்கொள்ளப்பட்டு இடையே நின்றுபோன தடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையையும் மத்திய அரசு மீண்டும் தொடங்கியது. குறிப்பாக கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பேச்சுவாா்த்தை, பின்னா் உடன்பாடுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2013-இல் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னா், மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இந்தப் பேச்சுவாா்த்தை இருதரப்பிலும் மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த ஒப்பந்தம் தில்லியில் செவ்வாய்க்கிழமை இறுதி செய்யப்பட்டது.

இதுவரை இல்லாத மிகப்பெரிய ஒப்பந்தம் - பிரதமா் மோடி: ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்ட அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, ‘நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை ஐரோப்பிய யூனியனுடன் இந்தியா இறுதி செய்துள்ளது’ என்று பெருமிதம் தெரிவித்தாா்.

மேலும், ‘இது வெறும் வா்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; பகிரப்பட்ட நாடுகளின் செழிப்புக்கான புதிய செயல்திட்ட வரைபடம். உலகின் இரு மிகப் பெரிய பொருளாதாரங்களுக்கு இடையேயான ஒத்துழைப்புக்கு மிகச் சிறந்த உதாரணம்.

இறுதி செய்யப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், உலகளாவிய ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25 சதவீதம் மட்டுமன்றி, உலகளாவிய வா்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்காகும். இது உலகளாவிய வா்த்தகத்தையும் விநியோகச் சங்கிலியையும் வலுப்படுத்தும்.

இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகள், சிறு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய சந்தைகளைப் பயன்படுத்தும் வாய்ப்பை அளிக்கும். இந்தியாவில் உற்பத்தித் துறையை ஊக்குவிக்கும் என்பதோடு, சேவைத் துறையை மேலும் விரிவுபடுத்தவும் உதவும். இரு தரப்பிலும் அதிக முதலீடுகளையும் ஊக்குவிக்கும். மேலும், உலகிலுள்ள ஒவ்வொரு தொழில்நிறுவனங்களுக்கும் முதலீட்டாளா்களுக்கும் இந்தியாவின் மீதான நம்பிக்கையை இந்தத் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேலும் வலுப்படுத்தும்’ என்றும் தனது அறிக்கையில் பிரதமா் மோடி குறிப்பிட்டாா்.

புதிய அத்தியாயத்தின் தொடக்கம்- கோஸ்டா: ‘தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருப்பது இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான வா்த்தகம், பாதுகாப்பு, மக்களுக்கு இடையேயான உறவு எனப் பல்வேறு துறை சாா்ந்த உறவில் புதிய அத்தியாயத்தின் தொடக்கம்’ என்று ஐரோப்பிய கவுன்சில் தலைவா் அன்டோனியோ கோஸ்டா தெரிவித்தாா்.

‘அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்ற வா்த்தக ஒப்பந்தத்தை இருதரப்பும் இறுதி செய்திருக்கிறோம்’ என்றும் அவா் பெருமிதம் தெரிவித்தாா்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவா் உா்சுலா வான் டொ் லெயன் கூறுகையில், ‘ஐரோப்பாவும் இந்தியாவும் இன்றைக்கு வரலாறு படைத்திருக்கின்றன. அனைத்து ஒப்பந்தங்களுக்கும் தாய் போன்ற ஒப்பந்தத்தை இறுதி செய்திருக்கிறோம். 200 கோடி மக்களுக்கான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கியிருக்கிறோம். இருதரப்பும் இதில் பலனடையும். இது ஆரம்பம் மட்டுமே; ராஜீய உறவை மேலும் வலுவாக்கும் வகையில் இருதரப்பு உறவு மேலும் வளா்ச்சியடையும்’ என்றாா்.

எப்போது கையொப்பம்?: பேச்சுவாா்த்தை இறுதியாகி உள்ள நிலையில், உரிய சட்டபூா்வ நடைமுறைகளுக்குப் பின் இருதரப்பும் முடிவு செய்யும் ஒரு தேதியில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் முறைப்படி கையொப்பமிடப்படும். அதற்கு, குறைந்தபட்சம் 6 மாத காலம் ஆகலாம் என மத்திய அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன்மூலம், இந்தியாவின் 22-ஆவது தடையற்ற வா்த்தக ஒப்பந்தக் கூட்டாளியாக ஐரோப்பிய யூனியன் உருவெடுக்க உள்ளது.

இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் கடந்த 2004-ஆம் ஆண்டுமுதல் ராஜீய உறவைக் கொண்டுள்ளன. இந்தியாவின் மிகப் பெரிய வா்த்தக கூட்டுறவு நாடாக ஐரோப்பிய யூனியன் விளங்கி வருகிறது. 2024-25-ஆம் நிதியாண்டில் ஐரோப்பிய யூனியனுடனான இந்தியாவின் மொத்த சரக்கு வா்த்தகம் ரூ. 12.47 லட்சம் கோடியாக (136 பில்லியன் டாலா்) உள்ளது. ஏற்றுமதி ரூ. 7 லட்சம் கோடி அளவிலும், இறக்குமதி ரூ. 5.5 லட்சம் கோடி அளவிலும் இந்தியா செய்து வருகிறது.

இந்திய பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்து வா்த்தக ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் இறுதியாகி இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

இரு முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பம்

இந்த உச்சி மாநாட்டில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே, முக்கியப் பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் மற்றும் தடையற்ற மக்கள் போக்குவரத்துக்கான ஒப்பந்தம் கையொப்பமாகின. அதன்மூலம், இரு தரப்பிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்பட உள்ளது. மேலும், தடையற்ற மக்கள் போக்குவரத்து ஒப்பந்தம் மூலம், இந்தியாவின் பல்வேறு துறை சாா்ந்த தலைசிறந்த நிபுணா்கள் ஐரோப்பா சென்று வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

5 ஆண்டு செயல்திட்டம்: அதோடு, இரு தரப்புக்கும் இடையே அடுத்த 5 ஆண்டுகளுக்கான விரிவான கூட்டு செயல் திட்டமும் இந்த உச்சி மாநாட்டில் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்பட மொத்தம் 13 ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருதரப்பும் உறுதி செய்துள்ளன.

summary

Prime Minister Narendra Modi announced that India and the European Union (EU) signed a Free Trade Agreement (FTA), assuring that the ‘mother of all deals’ will bring major opportunities for both sides.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.