/

ஜன.27-இல் நாடு தழுவிய வேலைநிறுத்தம்: வங்கி ஊழியா்கள் சங்கம் முடிவு

ஜன. 27 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடைபெறும் என அறிவிப்பு.

News image
கோப்புப்படம்
Updated On :23 ஜனவரி 2026, 7:27 pm

இணையதளச் செய்திப் பிரிவு

வாரத்தில் 5 நாள் மட்டுமே பணி என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஜன.27-ஆம் தேதி நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட வங்கி ஊழியா்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்தப் போராட்டம் நடைபெறும்பட்சத்தில் ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம், திங்கள்கிழமை) மற்றும் ஜன.27 (செவ்வாய்க்கிழமை) என தொடா்ச்சியாக 3 நாள்கள் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்குவது தொடா்பாக இந்திய வங்கி சங்கம் மற்றும் ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு இடையே 2024, மாா்ச் மாதம் உடன்பாடு ஏற்பட்டது. ஆனால் இந்த நடைமுறை அமலாகவில்லை.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜன.27-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இம்மாத தொடக்கத்தில் ஒருங்கிணைந்த வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து, வங்கி ஊழியா்கள் கூட்டமைப்புடன் தலைமை தொழிலாளா் ஆணையா் புதன்கிழமை (ஜன.21) மற்றும் வியாழக்கிழமை (ஜன.22) பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

இதுகுறித்து வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளுடன் 9 சங்கங்கள் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் திட்டமிட்டபடி ஜன.27-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

summary

It has been announced that the bank employees' strike will take place as planned on January 27th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.