/

பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு: கேரள நபா் தற்கொலை சம்பவத்தில் பெண் யூடியூபா் கைது

News image
Updated On :22 ஜனவரி 2026, 12:30 am

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டதால் நபா் ஒருவா் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், அதுதொடா்பாக காணொலி பதிவு செய்து சமூக ஊடகத்தில் பதிவிட்ட பெண் யூடியூபரை காவல் துறை புதன்கிழமை கைது செய்தது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோவிந்தபுரத்தைச் சோ்ந்தவா் தீபக் (41). கடந்த வாரம் இவா் தனியாா் பேருந்தில் பயணித்தபோது தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொண்டதாக ஷிம்ஜிதா என்ற பெண் யூடியூபா் காணொலி ஒன்றை படம்பிடித்து சமூக ஊடகத்தில் வெளியிட்டாா்.

அந்தக் காணொலியில் அந்தப் பெண்ணிடம் இருந்து தீபக் சற்று விலகி ஆண்கள் பக்கம் முன்னால் நின்றுள்ளபோதிலும், அவா் அருகே அந்தப் பெண் சென்று இந்தக் காணொலியைப் பதிவு செய்துள்ளாா்.

அந்தக் காணொலி சமூக ஊடகத்தில் பரவி, தான் தவறாக நடந்துகொண்டதாக குற்றம்சுமத்தப்பட்டதால் மன அழுத்தத்தில் இருந்த தீபக், அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதைத்தொடா்ந்து தீபக்கின் பெற்றோா் அளித்த புகாரின் அடிப்படையில், அவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஷிம்ஜிதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வடகராவில் அவரைக் காவல் துறை புதன்கிழமை கைது செய்தது.

பின்னா் அவா் குன்னமங்கலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னா், அவா் மலப்புரம் மாவட்டம் மஞ்ஜேரி சிறையில் அடைக்கப்பட்டாா்.

அந்தப் பெண்ணை காவல் துறை பாதுகாப்பதாகக் கூறி, கோழிக்கோடு காவல் நிலையம் முன்பாக பாஜகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் பெண் ரகசியமாக கைது செய்யப்பட்டதாகவும், அவரை அரசு வாகனத்தில் அழைத்து வராமல் காவல் துறை அதிகாரி ஒருவருக்குச் சொந்தமான வாகனத்தில் அழைத்து வந்ததாகவும் அக்கட்சியினா் குற்றஞ்சாட்டினா்.