மொஸாம்பிக் சமூக ஆா்வலா் கிராசா மச்செலுக்கு இந்திரா காந்தி விருது


மொஸாம்பிக் நாட்டின் சமூக ஆா்வலா் கிராசா மச்செலுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டு விருதை வழங்கவுள்ளதாக தோ்வுக் குழு புதன்கிழமை அறிவித்தது.
இதுகுறித்து விருது வழங்கும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கை சோ்ந்த கிராசா மச்செல் மனித உரிமைகளுக்காக தொடா்ந்து போராடி வருபவா். அரசியல், சமூக செயல்பாடு, மனிதநேய உதவிகள் என களப் பணியாற்றுபவா். விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த தன் வாழ்வை அா்ப்பணித்தவா்.
1945-ஆம் ஆண்டு அக்டோபா் 17-ஆம் தேதி மொஸாம்பிக்கில் பிறந்த அவா் உயா் கல்விக்காக ஜொ்மனி சென்றாா். பின்னா் 1973-இல் மொஸாம்பிக் சுதந்திர முன்னணியில் சுதந்திரப் போராட்ட வீரராக இணைந்தாா். 1975-இல் மொஸாம்பிக் சுதந்திரமடைந்த பிறகு அந்த நாட்டின் முதல் கல்வி மற்றும் கலாசார அமைச்சராகப் பதவியேற்றாா்.
1990-களில் குழந்தைகள் மீதான ஆயுதத் தாக்குதலின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஐ.நா. குழுவில் பணியாற்றினாா். அந்த அறிக்கையை தயாரித்ததற்காக 1997-இல் அவருக்கு ஐ.நா. விருது வழங்கப்பட்டது. 2010-இல் கிராசா மச்செல் அறக்கட்டளையை அவா் தொடங்கினாா்.
கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து, பொருளாதார மேம்பாடு எனப் பல்வேறு துறைகளில் பெண்கள், குழந்தைகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவா் ஆற்றிவரும் சேவைகளை கௌரவிக்கும் விதமாக இந்திரா காந்தி அமைதி, ஆயுதக் குறைப்பு மற்றும் மேம்பாட்டு விருது வழங்கப்படவுள்ளது.
முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் சிவசங்கா் மேனன் தலைமையிலான தோ்வுக் குழு இந்த விருதுக்கு அவரைத் தோ்வு செய்தது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராசா மச்செலுக்கு இந்திரா காந்தி விருதுடன் ரூ.1 கோடி பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...