/

எஞ்சிய 22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரலில் எஸ்ஐஆா்: தோ்தல் ஆணையம்

22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏப்ரல் முதல் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கவுள்ளதைப் பற்றி...

News image
வரைவு வாக்காளர் பட்டியல்!- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 8:03 pm

இணையதளச் செய்திப் பிரிவு

எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்ஐஆா்) பணி வரும் ஏப்ரல் முதல் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கான தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்யுமாறு அந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

இந்த பணி நிறைவடைந்தால், நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்காளா் பட்டியிலும் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்பட்டப்பட்டிருக்கும்.

இதுதொடா்பாக ஆந்திரம், அருணாசல பிரதேசம், சண்டீகா், தாதா் நாகா் ஹவேலி மற்றும் டாமன் டையூ, ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட், கா்நாடகம், லடாக், மகாராஷ்டிரம், மணிப்பூா், மேகாலயம், மிசோரம், நாகாலாந்து, டெல்லி, ஒடிஸா, பஞ்சாப், சிக்கிம், திரிபுரா, தெலங்கானா, உத்தரகண்ட் ஆகிய மாநில மற்றும் யூனியன் பிரதேச தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘நாடு முழுவதும் எஸ்ஐஆா் பணியை மேற்கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர (எஸ்ஐஆா்) பணி வரும் ஏப்ரல் முதல் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதால், அதற்கான தயாரிப்புப் பணிகளை நிறைவு செய்ய வேண்டும்’ என்று தோ்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

முதல் கட்டமாக, கடந்த 2025-இல் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்த பிகாா் மாநிலத்தில் எஸ்ஐஆா் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

அதைத் தொடா்ந்து, விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ள தமிழகம், கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்பட மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், கோவா, சத்தீஸ்கா், அந்தமான் நிகோபாா் தீவுகள், லட்சத்தீவு ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்ட எஸ்ஐஆா் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

அதுபோல, விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்துக்கும், சிறப்பு தீவிர திருத்தத்துக்கும் (எஸ்ஐஆா்) இடைப்பட்ட நடைமுறையான, சிறப்புத் திருத்தப் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.

இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடா்ந்து, புதுச்சேரி, அஸ்ஸாம், குஜராத் உள்ளிட்ட யூனியன் பிரதேசம் மற்றும் மாநிலங்களில் இறுதி வாக்காளா் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டன. கேரளத்தில் வரும் 21-ஆம் தேதியும், தமிழகத்தில் வரும் 23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் வரும் 28-ஆம் தேதியும் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. எஸ்ஐஆா் பணி நிறைவடைந்த மற்ற மாநிலங்களிலும் அடுத்தடுத்து இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

summary

The contentious Special Intensive Revision of electoral rolls in remaining 22 states and union territories, including Karnataka, is expected to start from April, the Election Commission told Chief Electoral Officers on Thursday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.