/

இந்தியப் பயணத்தை நிறைவு செய்து புறப்பட்டார் பிரான்ஸ் அதிபர்!

பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானின் இந்தியப் பயணம் குறித்து...

News image
பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் பிரதமர் மோடி.- (கோப்புப் படம்)
Updated On :19 பிப்ரவரி 2026, 3:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மும்பையைத் தொடர்ந்து, தில்லி சென்ற பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் தனது இந்தியப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

தில்லியில் நடைபெறும் செய்யறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசின் அழைப்பில் பேரில், பிரேசில், ஸ்பெயின், கஜகஸ்தான் உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் மற்றும் அவரின் மனைவி பிரிஜிட் மேக்ரான் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை (பிப். 17) மும்பை வந்தடைந்தனர்.

மும்பையில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்தியாவுடனான உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். இந்தச் சந்திப்பில், இருநாடுகளுக்கு இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதையடுத்து, அதிபர் மேக்ரான் அவரது மனைவியுடன் புகழ்பெற்ற வரலாற்று சின்னமான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை செவ்வாய்க்கிழமை இரவு நேரில் பார்வையிட்டார்.

பின்னர், மும்பையிலிருந்து விமானம் மூலம் புதன்கிழமை தில்லி வந்தடைந்த அதிபர் மேக்ரான் இன்று நடைபெற்ற செய்யறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். மேலும், மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடியுடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த பிப்.17 ஆம் தேதி முதலான தங்களது இந்தியப் பயணத்தை நிறைவு செய்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் அவரின் மனைவி பிரிஜிட் ஆகியோர் இன்று மாலை பிரான்ஸ் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் நேரில் சென்று வழியனுப்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.