/

எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பால் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் : ராஜ்நாத் சிங்

எவரெஸ்ட் சிகரத்தின் மீதும் பறக்கக்கூடிய திறன் வாய்ந்த இலகுரக ஹெலிகாப்டர்களை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கிறது.

News image
பிரான்ஸ் பாதுகாப்புத் துறை கேத்தரின் வெளட்ரின் உடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்- படம் - பிடிஐ
Updated On :17 பிப்ரவரி 2026, 3:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், பாதுகாப்புத் துறை ஏற்றுமதி அதிகரிக்கும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (பிப். 17) தெரிவித்தார்.

கர்நாடகத்தின் வெமகல் பகுதியில் டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் மற்றும் ஏர்பஸ் இணைந்து தயாரிக்கும், எச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியின் இறுதி அசெம்ளியை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து தொடக்கி வைத்தனர்.

இந்த எச் 125 ஹெலிகாப்டர், பொது பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்களின் தேவையை பூர்த்தி செய்யும். எவரெஸ்ட் சிகரங்களில் ராணுவ நடவடிக்கைகளின்போது எச் 125 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.

டாடாவும் ஏர்பஸும் இணைந்து ராணுவ நடவடிக்கைகளுக்கான பிரத்யேகமாக எச் 125எம் என்ற இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. இவை எச் 125 ஹெலிகாப்டர்களில் இருந்து சற்று மாறுபட்டதாக ராணுவ சூழல்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

கர்நாடகத்தில் எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து மும்பையில் இருந்தவாரு காணொலி வாயிலாகத் தொடக்கி வைத்தனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பிரான்ஸ் பாதுகாப்புத் துறை கேத்தரின் வெளட்ரினும் கர்நாடகத்தில் நடந்த தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொணடனர்.

நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

''எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்புக்கான முதலீடு ரூ. 1000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறன் வாய்ந்த இளம் தலைமுறையினருக்காக நேரடி மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். உலகின் மிகச்சிறந்த ஏற்றுமதியாளர்களில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது. நாட்டின் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது எச் 125 ஹெலிகாப்டர் தயாரிப்பானது, பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை புதிய மைல்கல்லை நோக்கி எடுத்துச் செல்லும்.

எவரெஸ்ட் சிகரத்தின் மீதும் பறக்கக்கூடிய திறன் வாய்ந்த இலகுரக ஹெலிகாப்டர்களை இந்தியாவும் பிரான்ஸும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கிறது என்பது பெருமைக்கொள்ள வேண்டியது. இந்தியாவின் இந்த தயாரிப்பு உலக நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

பாதுகாப்புத் துறையில் பன்முகத் தன்மை வாய்ந்த இலகுரக ஹெலிகாப்டர்களின் தேவையை எச் 125 ஹெலிகாப்டர் பூர்த்தி செய்யும். ராணுவப் பயன்பாட்டிற்காக பிரத்யேகமாக எச் 125எம் ஹெலிகாப்டர்களை டாடாவும் ஏர்பஸ்ஸும் இணைந்து தயாரிக்கின்றன'' என ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

summary

Defence exports increased manifold, putting India among top exporters in world: Rajnath Singh at H125 helicopter unit inauguration

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.