/

அஜீத் பவார் மரணம்: விமான விபத்து விசாரணை தொடர்பாக அமித் ஷாவுக்கு ரோஹித் பவார் கடிதம்!

அஜீத் பவார் உயிரிழக்கக் காரணமாக இருந்த விமான விபத்து தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி எம்எல்ஏ ரோஹித் பவார் கடிதம் எழுதியுள்ளார்.

News image
ரோகித் பவார் - அஜீத் பவார்
Updated On :14 பிப்ரவரி 2026, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவார் கடந்த ஜனவரி 28ஆம் தேதி உயிரிழக்கக் காரணமாக இருந்த விமான விபத்து தொடர்பாக விரிவாக விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அந்த மாநில எம்எல்ஏ ரோஹித் பவார் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக ரோஹித் பவார் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அஜீத் பவார் உயிரிழக்கக் காரணமாக இருந்த விமான விபத்து தொடர்பான எனது கவலைகளைத் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு ஆகியோருக்கும் விமானப் போக்குவரத்து இயக்குநருக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளேன்.

இந்த விமான விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர்களை கேட்டுக் கொண்டுள்ளேன். இந்த விவகாரத்தில் எனது கோரிக்கை அரசியல் ரீதியிலானது அல்ல. மாறாக இந்த விபத்தின் பின்னணியில் உள்ள உண்மையை சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு வெளிக்கொணர வேண்டும் என்பதே எனது கோரிக்கை.

விமான விபத்து தொடர்பான சம்பவங்கள் மக்கள் முன் விளக்கப்பட வேண்டியது முக்கியமானது. இந்த விவகாரத்தில் எந்த சந்தேகமோ, ஊகமோ யாருக்கும் இருக்கக் கூடாது என்றார் அவர். தனது கடிதம், மின்னஞ்சல் ஆகியற்றின் புகைப்படங்களை அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.

முன்னதாக, ரோஹித் பவார் கடந்த 10-ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசுகையில் "அஜீத் பவார் உயிரிழக்கக் காரணமான விமான விபத்தில் சதி இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்க வாய்ப்பிருக்கிறது' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.