/

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது பற்றி...

News image
சபரிமலையில் ஜெயராம்- (கோப்புப் படம்)
Updated On :10 பிப்ரவரி 2026, 5:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

சபரிமலைக் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கு தொடர்பான விசாரணைக்கு அடுத்த வாரத்தில் ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சபரிமலை தங்கக் கவச மோசடி தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து, சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது.

இவ்விவகாரத்தில் 2 தனித்தனி வழக்குகளைப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட எஸ்ஐடி, தங்கக் கவசங்களின் புதுப்பித்தல் செலவை ஏற்றுக்கொண்ட பெங்களூரு தொழிலதிபர் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியம் முன்னாள் தலைவா்கள் இருவர், கோயில் தந்திரி கண்ரடரு ராஜீவரைக் கைது செய்தது.

தொடர்ந்து, கேரள காவல் துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆர்) தீவிரத்தின் அடிப்படையில், இந்த முறைகேடு தொடர்பாக பண மோசடி வழக்கை அமலாக்கத் துறை கடந்த 9-ஆம் தேதி பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.

இதனிடையே, நடிகர் ஜெயராமின் வீட்டில் தங்கத் தகடுகள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த படங்கள் வெளியானது. தொடர்ந்து, சென்னையில் உள்ள இல்லத்தில் ஜெயராமிடம் எஸ்ஐடி குழுவினர் வாக்குமூலம் பெற்றனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் உன்னிகிருஷ்ணன் என்பவருக்கும் நடிகர் ஜெயராமுக்கும் இடையேயான தொடர்பு குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், உன்னிகிருஷ்ணனுடன் இருக்கும் பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக நடிகர் ஜெயராமை அடுத்த வாரம் விசாரணைக்கு நேரில் ஆஜராகக் கோரி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.