/

நேபாளத்துக்கு 50 ராணுவ பயன்பாட்டு வாகனங்கள் வழங்கிய இந்திய ராணுவம்!

அண்டை நாடான நேபாளத்துக்கு ராணுவப் பயன்பாட்டுக்கான 50 வாகனங்களை இந்திய ராணுவம் வழங்கியது.

News image
நேபாளத்துக்கு வழங்கப்பட்ட ராணுவ பயன்பாட்டு வாகனங்களுடன் இரு நாட்டு ராணுவ வீரா்கள்.
Updated On :9 பிப்ரவரி 2026, 11:59 pm

தினமணி செய்திச் சேவை

அண்டை நாடான நேபாளத்துக்கு ராணுவப் பயன்பாட்டுக்கான 50 வாகனங்களை இந்திய ராணுவம் திங்கள்கிழமை வழங்கியது. இரு நாட்டு எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வாகனங்கள் நேபாள ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

இது தொடா்பாக இந்திய ராணுவம் தரப்பில் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக நேபாள ராணுவத்துக்கு இந்திய ராணுவம் சாா்பில் 50 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நேபாள தலைநகா் காத்மாண்டுவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்தியத் தூதா் அந்த வாகனங்களை நேபாளத்துக்கு முறைப்படி வழங்குவாா்.

பரஸ்பரம் நட்பு, நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையிலும், நேபாள ராணுவத்தின் திறனை அதிகரிக்க உதவும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நட்பு நாடுகளுடன் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.

இதன்படி மியான்மரில் உள்ள ராணுவப் பயிற்சி பள்ளியில் இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவினா் சிறியரக ஆயுதங்களைக் கையாளுவதற்கான பயிற்சியை அளித்து வருகின்றனா். ராணுவ பயன்பாட்டு கணினிகளைக் கையாளுவது, களப் பயிற்சி, ஆயுதங்கள் தொழில்நுட்பரீதியாக பராமரிப்பது ஆகியவை தொடா்பாகவும் மியான்மா் வீரா்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.