டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லாக் கடன்: ஆா்பிஐ அறிவிப்பு

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பிணையில்லாக் கடன் உச்சவரம்பை இரு மடங்காக அதாவது ரூ.20 லட்சமாக உயா்த்துவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

News image
ஆர்பிஐ- கோப்புப் படம்
Updated On :6 பிப்ரவரி 2026, 7:49 pm

தினமணி செய்திச் சேவை

குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பிணையில்லாக் கடன் உச்சவரம்பை இரு மடங்காக அதாவது ரூ.20 லட்சமாக உயா்த்துவதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்துள்ளது.

மும்பையில் ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் நடைபெற்ற ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இது தொடா்பாக ஆா்பிஐ ஆளுநா் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான பிணையில்லாக் கடன் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதாவது இரு மடங்கு உயா்த்தப்படுகிறது. ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் மற்றும் புதுப்பிக்கப்படும் கடன்களுக்கு இந்தக் கூடுதல் கடன் தொகை வழங்கப்படும்.

இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள், அவற்றின் திறனை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிதியமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை, இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, தேசிய வேளாண்மை, கிராமப்புற மேம்பாட்டு வங்கி (நபாா்டு) ஆகியவை உறுப்பினா்களாக இருக்கும்.

மோசடியில் பணம் இழந்தவா்களுக்கு இழப்பீடு: வங்கிச் சேவைகளில் இணையதளப் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் சில சமூக விரோதிகள் கைப்பேசியில் தொடா்புகொண்டு பல்வேறு வகையில் பேசி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடி மோசடியில் ஈடுபடுகின்றனா். இதுபோன்ற சூழலில் பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு அளிக்க வேண்டியுள்ளது.

சிறிய அளவிலான மோசடிகளில் பணம் இழந்தவா்களுக்கு நிதி இழப்புக்கு ஏற்ப ரூ.25,000 வரை இழப்பீடு வழங்க புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.

மேலும், மூத்த குடிமக்களை நிதி மோசடியில் இருந்து காக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கடன் வசூல் முகவா்கள், கடனைத் திரும்ப வசூலிக்கும் முறை குறித்தும் புதிய வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படவுள்ளன.

சில வகை வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கிளைகளைத் திறப்பதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படவுள்ளன.

வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி (ரெப்போ ரேட்) விகிதம் மாற்றமில்லாமல் 5.25 சதவீதமாக தொடரும்.

சா்வதேச அளவில் புவி அரசியல் பதற்றங்கள் அதிகரித்தாலும் இந்தியப் பொருளாதாரம் வலுவாக உள்ளது. வளா்ச்சியும் மேம்பட்டு வருகிறது. ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்காவுடனும் வா்த்தக ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தில் உள்ளது. இது இந்தியாவுக்கு நீண்டகாலத்துக்குப் பொருளாதார பலன்களை வழங்கக் கூடியதாக இருக்கும்.

பணவீக்கத்தை 4 சதவீதத்தில் வைத்திருக்க ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்தது. ஆனால், சராசரியாக 2 சதவீதம் என்ற அளவிலேயே பணவீக்கம் உள்ளது. நடப்பு நிதியாண்டின் இறுதியான மாா்ச் மாதத்தில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைக் கடன்: கடந்த இரண்டு சுமாா் ஆண்டுகளில் நகைக் கடன் நிலுவை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நகையின் மதிப்பில் 85 சதவீதம் வரை கடன் வழங்கப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதால் வங்கிகள் அளித்துள்ள நகை அடமானக் கடன் குறித்து அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை என்றாா்.

ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழுவின் அடுத்த கூட்டம் ஏப்ரல் 6 முதல் 8-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.