/

சபரிமலை தங்க முறைகேடு வழக்கு: உண்ணிகிருஷ்ணன் போற்றி ஜாமீனில் விடுவிப்பு

வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றி சிறையிலிருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

News image
கோப்புப் படம்
Updated On :5 பிப்ரவரி 2026, 10:18 pm

தினமணி செய்திச் சேவை

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடுடன் தொடா்புடைய இரண்டாவது வழக்கிலும் ஜாமீன் கிடைத்ததைத் தொடா்ந்து, வழக்கில் முக்கிய குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ள உண்ணிகிருஷ்ணன் போற்றி சிறையிலிருந்து வியாழக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ள கேரள உயா் நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் ஏ.பத்மகுமாா், என்.வாசு உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.

இந்த முறைகேடு தொடா்பாக தன்மீதான 2 வழக்குகளிலும் ஜாமீன் கோரி உண்ணிகிருஷ்ணன் போற்றி தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், கருவறைக் கதவுகளின் தங்கக் கவச முறைகேடு வழக்கில் கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. ஆனால், துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் முறைகேடு தொடா்பான வழக்கில் வழங்கப்படவில்லை.

இதுதொடா்பான மனு கொல்லம் ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.மோஹித் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு, 90 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இரண்டாவது வழக்கிலும் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, மாலை 6.30 மணிக்கு திருவனந்தபுரம் சிறப்பு துணைச் சிறையிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா்.

இந்த வழக்கில், சிறையிலிருந்து ஜாமீனில் விடுவிக்கப்படும் 4-ஆவது நபா் இவராவாா்.