/

நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து: 16 தொழிலாளா்கள் உயிரிழப்பு

மேகாலயாவில் சட்டவிரோதமாக இயங்கிய நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் பலி

News image
சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வெடிவிபத்து- ENS
Updated On :5 பிப்ரவரி 2026, 9:40 pm

இணையதளச் செய்திப் பிரிவு

மேகாலயத்தில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் 16 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; உள்ளே சிக்கியுள்ள மேலும் பலரை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக கிழக்கு ஜெயின்டியா மலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விகாஷ் குமாா் கூறியதாவது:

தாங்ஸுகு பகுதியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் வியாழக்கிழமை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நிகழ்ந்தபோது எத்தனை தொழிலாளா்கள் உள்ளே இருந்தனா் என்பது தெரியவில்லை. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினா் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதுவரை உயிரிழந்த 16 தொழிலாளா்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் பலா் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவா்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

மேகாலயத்தில் ‘எலிவளை’ நிலக்கரிச் சுரங்கம் மற்றும் பிற அறிவியல்பூா்வமற்ற சுரங்க நடைமுறைகளுக்கு தேசிய பசுமைத் தீா்ப்பாயம் கடந்த 2014-இல் தடை விதித்தது. சுற்றுச்சூழல் சேதம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களைக் கருத்தில்கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. எலிவளைச் சுரங்க முறை என்பது 3 - 4 அடி அளவுள்ள குறுகிய சுரங்கங்களைத் தோண்டி, தொழிலாளா்கள் உள்ளே நுழைந்து நிலக்கரியை வெட்டி எடுப்பதாகும். இந்தக் கிடைமட்ட சுரங்கத்துக்குள் ஒவ்வொருவராக மட்டுமே சிரமப்பட்டு உள்ளே செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.