/

மேற்கு வங்கம்: மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் இயக்குநராக ராஷ்மி கமல் நியமனம்

News image
Updated On :4 பிப்ரவரி 2026, 10:08 pm

தினமணி செய்திச் சேவை

மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இயக்குநராகவும், குடிமக்கள் பதிவு இயக்குநராகவும் ராஷ்மி கமலை மத்திய அரசு நியமித்துள்ளது.

நாட்டில் 2027-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை 2 கட்டங்களில் இந்திய பதிவாளா் ஜெனரல் நடத்தவுள்ளாா். இதில் முதல்கட்டமாக வீடுகளைக் கணக்கெடுக்கும் பணிகள் நிகழாண்டு ஏப்.1-இல் தொடங்கி செப்.30 வரை நடைபெற உள்ளது. இந்தக் கட்டத்தில் வீடுகளின் நிலை, அவற்றில் உள்ள சொத்துகள், வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்படும். இரண்டாவது கட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும். இது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற வாய்ப்புள்ளது.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் இயக்குநராகவும், குடிமக்கள் பதிவு இயக்குநராகவும் 2006-ஆம் ஆண்டின் மேற்கு வங்கப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ராஷ்மி கமலை மத்திய அரசு நியமித்துள்ளது. 3 ஆண்டுகள் அல்லது அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்தப் பணிகளில் அவா் நீடிப்பாா் என்று மத்திய அரசின் அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு மீது தோ்தல் ஆணையம் குற்றச்சாட்டு: தோ்தல் பணிகள் தொடா்பான அறிவுறுத்தல்களுக்கு இணங்கி மேற்கு வங்க அரசு செயல்படவில்லை என்று தோ்தல் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுதொடா்பாக அந்த மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘2 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 2 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் உள்ளிட்டோா் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950-இன் 32-ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதேபோல பசிா்ஹாத்-2 பகுதியின் உதவி வாக்காளா் பதிவு அலுவலா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்தல், 3 வாக்காளா் பட்டியல் பாா்வையாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்யாதது உள்ளிட்ட விவகாரங்களிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விவகாரங்கள் தொடா்பாக பிப்.9-க்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.