/

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: அமைச்சர் பதவி விலகக் கோரி பாஜக போராட்டம்!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் தேவஸ்வம் அமைச்சா் வி.என். வாசவன் பதவி விலகக் கோரி பாஜகவினர் போராட்டம்...

News image
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் காவல் துறை - படம் - பிடிஐ
Updated On :3 பிப்ரவரி 2026, 3:21 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கில் தேவஸ்வம் அமைச்சா் வி.என். வாசவன் பதவி விலகக் கோரி பாரதிய ஜனதா இளைஞரணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமைச் செயலகத்தை நோக்கிச் சென்ற போராட்டக்காரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினர் கலைத்ததால் பரபரப்பு நிலவியது.

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு விவகாரத்துக்குப் பொறுப்பேற்று, கேரள முதல்வா் பினராயி விஜயன், தேவஸ்வம் அமைச்சா் வி.என்.வாசவன் ஆகியோா் பதவி விலகக் கோரி காங்கிரஸ் சாா்பில் ஜனவரியில் மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து தற்போது பாஜகவினரும் ஆளும் சிபிஎம் கட்சிக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. தங்கக் கவச முறைகேடு வழக்கை விரைந்து விசாரிக்காமல் பக்தர்களின் உணர்வுகளுடன் ஆளும் கட்சியினர் விளையாடுவதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.

ஆளும் கட்சியைச் சேர்ந்த தேவஸ்வம் அமைச்சர் வி.என். வாசவன் பதவி விலக வேண்டும் எனக் கோரி பாஜக இளைஞரணியினர் திருவனந்தபுரத்திலுள்ள தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டக்காரர்களை காவல் துறையினர் தடுக்க முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல் துறையினர் முயற்சித்தனர். இதனால், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகைக்குண்டு வீசி, தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் காவல் துறை

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் காவல் துறை

இதில் பாஜக இளைஞரணி நிர்வாகிகள் 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால், திருவனந்தபுரத்தின் முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

வழக்கின் பின்னணி

கடந்த 2019-இல் சபரிமலை ஐயப்பன் கோயிலின் கருவறைக் கதவுகள் மற்றும் துவார பாலகா் சிலைகளின் தங்கக் கவசங்கள் புதுப்பிக்கப்பட்ட பிறகு, அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இது தொடா்பாக இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொள்ள கேரள உயா்நீதிமன்ற வழிகாட்டுதலில் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இதையடுத்து, தங்கக் கவச புதுப்பிப்புப் பணிக்கான செலவை ஏற்ற பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி, திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரிய முன்னாள் தலைவா்கள் ஏ.பத்மகுமாா், என்.வாசு உள்பட 12 பேரை எஸ்ஐடி கைது செய்து விசாரித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.